மேல் மாகாணசபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்

மேல் மாகாணசபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்

மேல் மாகாணசபையின் வரவு செலவுத்திட்டம் இன்றைய ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற விசேட மாகாணசபை அமர்வுகளின் போது மாகாணசபையின் ஒட்டுமொத்த வரவு செலவுத் திட்ட யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தோற்கடிக்கப்பட்டிருந்த மாகாண சுகாதார மற்றும் உள்நாட்டு வைத்திய அமைச்சின் வரவு செலவுத் திட்ட யோசனையும் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 22ம் திகதி அப்போதைய மாகாண சுகாதார அமைச்சர் நிசாந்த சிறி வர்ணசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சிற்கான வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டது.

இந்த வரவு செலவுத்திட்ட யோசனையை இன்று சுகாதார அமைச்சினைப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ள முதலமைச்சர் இசுர தேவப்பிரிய முன்வைத்துள்ளார்.

இந்த வரவு செலவுத்திட்ட யோசனையை நிறைவேற்றிக்கொள்ளும் நோக்கிலேயே இன்றைய தினம் அமர்வு நடத்தப்பட்டுள்ளது.

மேலும் வரவு செலவுத் திட்ட யோசனை தோற்கடிக்கப்பட்டு அமைச்சுப் பதவியை இழந்த ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நிசாந்த சிறி வர்ணசிங்க கட்சியின் மற்றுமொரு உறுப்பினர் இன்றைய அமர்வுகளில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த அமர்வுகளில் ஜே.வி.பி.யின் எந்தவொரு உறுப்பினரும் பங்கேற்கவில்லை.