இந்திய – இலங்கை பாலம் அமைக்கப்படாது அரசு கடும் எதிர்ப்பு

இந்திய – இலங்கை பாலம் அமைக்கப்படாது அரசு கடும் எதிர்ப்பு

தமிழ்நாட்டின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையேயான பாலம் அமைக்கும் இந்தியாவின் யோசனையை இலங்கை அரசாங்கம் நிராகரித்ததோடு எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளது.

இப்பாலம் அமைக்கும் திட்டமென்பது இலங்கையின் சூழலியலை பாதிப்பது மட்டுமல்லாது உயிரியல் பன்முகத் தன்மையையும் பாதிப்படையச் செய்யும் என்றும் அரசாங்கம் நேற்று அறிவித்தது.

பெலவத்தையிலுள்ள நெடுஞ்சாலைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அரசு சார்பில் கருத்து தெரிவித்த நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த அறிவிப்பை விடுத்தார்.

அமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவின் தமிழ் நாட்டின் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையேயான பாலம் அமைக்கப்பட மாட்டாது என பாராளுமன்றத்தில் திட்டவட்டமாக அறிவித்தார். தனது இந்திய விஜயத்தின் போது இப் பாலம் அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இவ்வாறானதொரு நிலையில் இந்திய மத்திய அரசின் அமைச்சரொருவர் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே பாலம் அமைக்கப்படும் என்றும் அது தொடர்பாக இலங்கையுடன் பேசப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

சேது சமுத்திர திட்டத்திற்கும் இந்தியாவிற்குள்ளே எதிர்ப்பு தோன்றியது. சூழல் பாதிக்கப்படும், உயிரியல் பன்முகத்தன்மை அழிவுக்குள்ளாகும் என கடும் எதிர்ப்பு தலைதூக்கியதால் சேது சமுத்திர திட்டம் கைவிடப்பட்டது.

இதேபோன்று இலங்கை – இந்திய  பாலம் அமைக்கும் இந்தியாவின் யோசனைக்கும் அந்நாட்டுக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பும் என்றார்.