இரட்டைக் குழந்தைகளுக்கு ஒரு தாய், வெவ்வாறான தந்தை

இரட்டைக் குழந்தைகளுக்கு ஒரு தாய், வெவ்வாறான தந்தை

தெற்கு ஆசிய நாடான வியட்நாமின் ஹோமாபின் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்களுக்கு பிறந்த இரண்டு வயதாகும், இரட்டை குழந்தைகளும், உடல் உருவம், தலைமுடி, நடவடிக்கைகளில் மாறுபட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ஒருவேளை மருத்துவமனையில், குழந்தையை மாற்றிக் கொடுத்திருப்பார்களோ என, அந்த தம்பதிக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து டி.என்.ஏ. எனப்படும், மரபணு சோதனை நடத்தப்பட்டது, தற்போது அந்த குடும்பத்துக்கு மிகப்பெரிய சோதனையாகி விட்டது.அந்த இரண்டு குழந்தைகளுக்கும், அந்த பெண்ணே தாய் என்பதும், ஆனால், தந்தை தான் வேறு வேறு என்பதும் டி.என்.ஏ. சோதனையில் தெரியவந்துள்ளது.

*இது சாத்தியமா?

இரட்டையரில், இரண்டு குழந்தைக்கு ஒரே தாயும், இரண்டு தந்தையும் இருக்க முடியுமா என்ற கேள்விக்கு முடியும் என, மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு பெண்ணின் சினைமுட்டையின் ஆயுள், 12 முதல், 48 மணி நேரம். ஆணின் விந்தணுவின் ஆயுள், ஏழு முதல், 10 நாட்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் ஒரு பெண், இரு ஆண்களுடன் உடலுறவு கொண்டிருந்தால், அவருடைய கருவில் வளரும் இரண்டு குழந்தைகளுக்கு, இரண்டு தந்தைகள் இருப்பதற்கான சாத்தியம் உள்ளது என, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மவுன்ட் சினானி மருத்துவமனை இயக்குனர் கீத் எடில்மேன் கூறியுள்ளார்.

வியட்நாமில், இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை. அந்த இரட்டையரில் மற்றொரு குழந்தையின் தந்தை யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.