பௌத்த மதத்தினை பரப்ப முழுச்சுதந்திரம் எமக்குண்டு – வவுனியாவில் BBS இனது பேரணி ஆரம்பம்..

பௌத்த மதத்தினை பரப்ப முழுச்சுதந்திரம் எமக்குண்டு – வவுனியாவில் BBS இனது பேரணி ஆரம்பம்..

வடக்கில் தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்கு உட்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் மற்றும் பௌத்த மயமாக்கலுக்கு எதிராகவும், அதிகரித்த இராணுவப் பிரசன்னத்தை குறைக்குமாறும் வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கடந்த 24 ஆம் திகதி நடத்தப்பட்ட எழுக தமிழ் பேரணிக்கு  எதிர்ப்பு  தெரிவித்து  சிங்கள பேரினவாத அமைப்பான பொது பல சேனா வவுனியாவில்  கண்டனப் பேரணியொன்றை முன்னெடுத்துள்ளது.

குறித்த இந்த எதிர்ப்பு கண்டனப் பேரணி இன்று காலை 9.30 அளவில் வவுனியா மாமடு சந்தியில் இருந்த ஆரம்பமாகியுள்ளது. வவுனியா நகர் வரை இடம்பெறும் இந்தப் பேரணியில் சுமார் 150 பேர் வரை கலந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானாசார தேரர் இந்த கண்டனப் பேரணிக்கு தலைமை தாங்கியுள்ளதுடன், வவுனியாவைச் சேர்ந்த எவரும் இதில் கலந்துகொள்ளவில்லை எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

வெளி இடங்களிலிருந்து மூன்று பேரூந்துகளில் அழைத்து வரப்பட்ட பொது பல சேனா  அமைப்பின் ஆதரவாளர்களே இதில் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்களிப்புடன் யாழில் கடந்த 24 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற எழுக தமிழ் பேரணியால் தென்பகுதி சிங்கள அரசியல் கட்சிகளும், இனவாத தரப்பினரும் குழம்பிப்போயுள்ள நிலையிலேயே பொது பல சேனா அமைப்பு எழுக தமிழ் பேரணி ஊடாக தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் அந்த பேரணியில் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட விடையங்களுக்கு கண்டனம் தெரிவித்தும் இந்தப் பேரணியை முன்னெடுத்துள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் சிங்கள மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ள பொதுபல சேனா, சிங்களவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தமாறும் வலியுறுத்தியுள்ளது.

அதேவேளை ஸ்ரீலங்கா ஒரு சிங்கள பௌத்த நாடு என்றும், அதனால் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் புத்தர் சிலைகளை வைப்பதற்கும், பௌத்த விகாரைகளை அமைப்பதற்கும் உரிமை இருப்பதாகவும், இந்த நடவடிக்கைகளை எவரும் எதிர்க்க முடியாது என்றும் பொது பல சேனா  கூறியுள்ளது.