வாகனக் கொள்வனவுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்..

வாகனக் கொள்வனவுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்..

லீசிங் முறையில் வாகனங்கள் வழங்குவது தொடர்பில் நிதி நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய புதிய ஒழங்குமுறை எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி அமுலுக்கு வரவிருப்பதாக  நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

வாகனப் பெறுமதியில் நூற்றுக்கு 70 வீதத்தை லீசிங் முறையில் வழங்குவதற்கு இதுவரை காலமும் நிதி நிறுவனங்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், ஒவ்வொரு வாகனங்களின்  வகைகளுக்கு அமைய லீசிங் வழங்கும் தொகையின் எல்லையைத் தீர்மானிப்பதற்கான புதிய நடைமுறை ஜனவரி மாதம் முதல் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

மோட்டார் வாகனமொன்றை லீசிங் முறையில் கொள்வனவு செய்வதாயின் வாகனத்தின் பெறுமதியில் 50 வீதத்தை மாத்திரமே லீசிங் முறையில் வழங்க முடியும். இந்தப் பெறுமதியானது முச்சக்கர வண்டிக்கு நூற்றுக்கு  70 வீதம் லீசிங் பெற்றுக்கொள்ள முடிவதுடன், மோட்டார் சைக்கிளொன்றை லீசிங் முறையில் வழங்குவதாயின் வாகனப் பெறுமதியில் 70 வீதத்தை லீசிங் ஆக நிதி நிறுவனங்களுக்கு வழங்க முடியும் எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.

பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வாகனங்களை லீசிங் முறையில் வழங்குவதாயின், அந்தந்த வாகனங்களின் பெறுமதியில் 90 வீதத்தை லீசிங் முறையில் வழங்க நிதி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

2017 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் முன்மொழிவகளுக்கு அமைய லீசிங் முறையில் மாற்றங்கள் மேற்கொண்டிருப்பதாக நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.