ஆப்பை இழுத்த குரங்கின் கதியே மகிந்தவுக்கு நேரும்: ஐ.தே.கட்சி

ஆப்பை இழுத்த குரங்கின் கதியே மகிந்தவுக்கு நேரும்: ஐ.தே.கட்சி

அரசாங்கத்தை ஸ்திரமற்ற நிலைமைக்கு கொண்டு செல்ல எந்த வகையிலும் இடமளிக்க போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கத்தை கவிழ்க்க போவதாக எண்ணிக்கொண்டு அரசாங்கத்தில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தம் பக்கம் இழுத்து கொள்ளும் மகிந்த ராஜபக்சவுக்கு ஆப்பை இழுத்த குரங்குக்கு நேர்ந்த கதியே நேரும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமான இயங்க தயாராகி வருவதாக இன்று பல பத்திரிகைகளில் பிரதான தலைப்புச் செய்து வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் தோல்வியடைந்தவர்களே சுயாதீனமாக இயங்க போவதாக கூறியுள்ளனர்.

நாடு ஸ்திரமற்ற நிலையில் இருக்கின்றது என்று காட்டி நாட்டுக்கு வரவிருக்கும் முதலீட்டாளர்களை தடுக்க முயற்சிக்கின்றார்களா என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு செய்து எங்களது திட்டங்களை சீர்குலைத்து அரசாங்கம் முன்னோக்கி செல்ல முடியாத நிலைமையை ஏற்படுத்த இவர்கள் எண்ணியுள்ளதாக நாங்கள் நினைக்கின்றோம்.

எனினும் தோல்வியடைந்தவர்களின் தேவை நிறைவேற நாங்கள் இடமளிக்க மாட்டோம்.

சைட்டம் மற்றும் உமா ஓயா திட்டங்கள் கடந்த அரசாங்கம் உருவாக்கிய பிரச்சினைகள். அரசாங்கம் அந்த பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் பண்டாரிகொட மேலும் குறிப்பிட்டுள்ளார்.