பிரதமருடனான சந்திப்புகளை விலக்கிக் கொள்கிறோம்  – GMOA..

பிரதமருடனான சந்திப்புகளை விலக்கிக் கொள்கிறோம் – GMOA..

சர்ச்சைக்குரிய சைட்டம் தொடர்பில் தங்களது சங்கமும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் எடுத்துள்ள ஆக்கபூர்வமான முடிவுகளை சுகாதார அமைச்சர் உதாசீனம் செய்து வருவதால் தொடர்ந்தும் பிரதமருடன் தங்களது கலந்துரையாடல்களை நடத்துவதை நிறுத்திக் கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

இலங்கையின் வைத்தியக் கல்வியின் குறைந்தபட்ச தரத்தை நிர்ணயிப்பதற்கான சட்ட வரைமுறைகளை பரிந்துரை செய்யுமாறு பிரதமர் சட்டவரைபுத் திணைக்களத்துக்கு அறிவித்தல் கொடுத்துள்ளார்.

இருப்பினும் பல்வேறு சட்டச் சிக்கல்கள் காரணமாக அதைச் செய்ய முடியாதென சட்ட வரைபுத் திணைக்களம் பதிலளித்துள்ளது. இதனால் பிரதமரின் வாக்கு வெறும் பேச்சளவிலேயே இருக்கிறது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

“நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை அரசு பொறுப்பேற்றபோது எந்தவிதமான சட்ட வரைமுறைகளும் பின்பற்றப்படவில்லை. எனினும், அது பொதுச் சொத்தாக வரும்போது பல்வேறு சட்டச் சிக்கல்கள் உருவாக இடமுண்டு.

இவ்வாறான பின்விளைவுகள் பற்றி சற்றும் சிந்திக்காமல் சுகாதார அமைச்சர் தன்னிச்சையாக எடுத்திருக்கும் முடிவுகள் நியாயமற்றவை.

ஜனாதிபதியும் பிரதமரும் எடுக்கும் முடிவுகளைக்கூட அலட்சியம் செய்து தன்போக்கில் செயற்படும் சுகாதார அமைச்சரை அவர்கள் இருவரும் கட்டுப்படுத்தாவிட்டால் தொடர்ந்தும் அவர்களுடன் பேசுவதில் எவ்வித பலனும் கிட்டப்போவதில்லை..” என அவர் மேலும் கூறியுள்ளார்.

 

 

(rizmira)