ரோஹிங்கியா அகதிகளை திரும்ப பெறுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்…

ரோஹிங்கியா அகதிகளை திரும்ப பெறுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்…

ரோஹிங்கியா அகதிகளை திரும்ப பெறுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மியன்மார் அரசுடன் கையெழுத்தாகியுள்ளதாக வங்காளதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் மியன்மாரில் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பித்த நாளில் இருந்து சுமார் 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது இராணுவம் நடத்திவரும் ஒடுக்குமுறைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் உட்பட பல உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சமீபத்தில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டுக்கு இடையில் மியன்மார் அரசின் தலைமை ஆலோசகரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகியை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் சந்தித்து, ரக்கினே மாநிலத்தில் உள்ள மக்களுக்கு மனிதநேய அடிப்படையிலான உதவிகள் சென்று சேருவதை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் மியன்மார் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, இராணுவ அதிகாரிகள், ரோகிங்கியா மக்கள் என பல தரப்பினரையும் அவர் சந்தித்து பேசினார். இதனையடுத்து, அந்நாட்டின் தலைமை ஆலோசகராக இருக்கும் ஆங் சான் சூகியுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, மியன்மாரை விட்டு வெளியேறிய அகதிகள் கண்ணியமான வகையில் மீண்டும் தாய்நாடு திரும்ப தேவையான நடவடிக்கைகளை ஆங் சான் சூகி மேற்கொள்ள வேண்டும் என டில்லர்சன் வலியுறுத்தினார். நாடு திரும்பும் அகதிகளின் மீள்குடியமர்த்தல் தொடர்பாக தேவையான வரையறைகளை வகுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

வங்காளதேசத்தில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா அகதிகளை திரும்ப பெறுவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளதாக மியன்மார் அரசின் ஆலோசகர் ஆங் சான் சூகி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வங்காளதேசத்தில் தஞ்சமடைந்துள்ள அகதிகளை நாடு திருப்புவது தொடர்பான ஒப்பந்தம் மியன்மார் அரசுடன் கையெழுத்தாகியுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இரண்டு மாதங்களில் அகதிகள் மியன்மாருக்கு திரும்பும் வகையில் ஒப்பந்தம் வரையறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அகதிகள் விவகாரத்தில் இரு நாட்டு அதிகாரிகளும் இணைந்து பணியாற்றி வருவதாகவும், ரோஹிங்கியா மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னர் அவர்கள் அனுப்பப்படுவார்கள், அவசரமாக அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.