வளமானதோர் இலங்கையை காண்பது எனது அபிலாசையாகும் – இந்திய ஜனாதிபதி…

வளமானதோர் இலங்கையை காண்பது எனது அபிலாசையாகும் – இந்திய ஜனாதிபதி…

இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தை சந்தித்தார். இச்சந்திப்பின்போது வளமானதோர் இலங்கையை காண்பது தனது அபிலாசையாகும் என்று இந்திய ஜனாதிபதி தெரிவித்தார்.

பிரதமர் தலைமையிலான தூதுக் குழுவினர் புதுடில்லி நகர ராஷ்டபதி பவனில் இந்திய ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பில் இந்தியா மற்றும் இலங்கைக்கிடையே காணப்படும் வரலாற்று சிறப்புமிக்க உறவினை அடிப்படையாகக்கொண்டு பொருளாதார மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்வது மிகவும் முக்கியமானது என்று இந்திய ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கை – இந்திய நட்புறவு எப்போதும் தனித்துவமான மட்டத்தில் காணப்பட்டதாகவும் தற்போது அந்த நட்புறவை மேம்படுத்துவதற்கு இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கும் தலைமைத்துவத்தினை பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமை தொடர்பாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சரவையினது சார்பில் வாழ்த்துக்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய ஜனாதிபதிக்கு தெரிவித்தார்.

மாநில ஆட்சியில் மிகுந்த அனுபவம் மிக்க இந்திய ஜனாதிபதி கோவிந்தினால் இந்தியாவிற்கு பாரிய சேவை கிடைக்கும் என்றும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

இலங்கை – இந்தியா பொருளாதாரத் தொடர்புகளை பலப்படுத்துவது தொடர்பாகவும் இருதரப்பினரிடையே மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதங்களை நீக்குவது தொடர்பிலும் இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெளிவுபடுத்தினார். இலங்கை மக்களுக்கு இந்திய உதவியுடன் வழங்கப்படும் வீடமைப்பு வேலைத்திட்டம் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.