சிரியாவில் போராளிகள் வசம் உள்ள பகுதிகளில் அரசு படைகள் தாக்குதல்- 100 பேர் உயிரிழப்பு…

சிரியாவில் போராளிகள் வசம் உள்ள பகுதிகளில் அரசு படைகள் தாக்குதல்- 100 பேர் உயிரிழப்பு…

சிரியாவில் போராளிகள் வசம் உள்ள பகுதிகளில் அரசு ஆதரவு படைகள் நடத்திய தாக்குதலில் 100 பேர் உயிரிழந்திருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக புரட்சிப் படையினர் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைநகர் டமஸ்கஸ் அருகேயுள்ள கிழக்கு கவுட்டா பகுதி 2012ம் ஆண்டில் இருந்து புரட்சிப் படை வசம் உள்ளது. குறித்த பகுதியை மீட்பதற்காக அரசு ஆதரவு படைகள் தற்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

கிழக்கு கவுட்டா முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று அரசு ஆதரவு படைகள் தாக்குதல் நடத்தின. விமான தாக்குதல், ராக்கெட் குண்டு தாக்குதல், பீரங்கி தாக்குதல் என நீண்ட நேரம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் 18 பேர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் காயமடைந்திருப்பதாகம் நேற்று இரவு செய்தி வெளியானது.

இந்நிலையில், அரசுப் படைகள் நடத்திய தாக்குதல்களில் 20 குழந்தைகள் உட்பட 100 பேர் உயிரிழந்திருப்பதாக பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சுமார் 300 பேர் காயமடைந்திருப்பதாகவும் கூறியுள்ளது.

தரைத் தாக்குதலுக்கு வழி ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் அரசு தற்போது விமான தாக்குதலை நடத்தியிருப்பதாக அந்த அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.