மாலைத்தீவில் அவசரகால நிலையை மேலும் 30 நாட்கள் நீடித்து அதிபர் உத்தரவு…

மாலைத்தீவில் அவசரகால நிலையை மேலும் 30 நாட்கள் நீடித்து அதிபர் உத்தரவு…

மாலைத்தீவில் பிரகடனப்படுத்தப்பட்ட 15 நாட்கள் நெருக்கடி நிலை நேற்றுமுன்தினம் முடிவடைந்த நிலையில், மேலும் 30 நாட்கள் அவசரகால நிலையை நீடித்து அதிபர் அப்துல்லா யாமீன் அறிவித்துள்ளார்.

மாலைத்தீவில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்தது செல்லாது, சிறையில் உள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், தனது ஆட்சிக்கு ஆபத்து வரும் என்பதால், நீதிமன்ற உத்தரவை ஏற்க அதிபர் அப்துல்லா யாமீன் மறுத்து விட்டார்.

இதனால், அவரை பதவி நீக்கும் நடவடிக்கையில் தலைமை நீதிபதி முடிவெடுத்தனை அடுத்து, கடந்த 5-ம் திகதி மாலைத்தீவில் 15 நாட்கள் அவசரநிலை பிரகடனம் செய்து அதிபர் உத்தரவிட்டார். ஊழல் குற்றச்சாட்டில் தலைமை நீதிபதி உள்ளிட்ட இரு நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர். நேற்றுமுன்தினம்(20) இரவுடன் அவசர நிலைக்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், அதனை நீட்டிக்க பாராளுமன்றத்திடம் அதிபர் கோரிக்கை விடுத்திருந்தார்.

அவசரகால நிலையை நீடிக்க நிலைக்குழு ஒப்புதல் அளித்துள்ளதால், மேலும் 30 நாட்கள் அவசரகால நிலை அமுலில் இருக்கும் என அதிபர் அப்துல்லா யாமீன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், 15 எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை இடைநிறுத்தம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறையில் உள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என முன்னர் பிறப்பித்த உத்தரவையும் திரும்ப பெற்றுக்கொள்வதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.