அமெரிக்க துணை அதிபருடனான சந்திப்பை இரத்து செய்த வட கொரியா…

அமெரிக்க துணை அதிபருடனான சந்திப்பை இரத்து செய்த வட கொரியா…

தென் கொரியாவில் நடைபெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப விழாவில் பங்கேற்ற அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், வட கொரிய அதிகாரிகளை சந்திப்பதற்கு திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் கடைசி நேரத்தில் வட கொரியா, சந்திப்பை கைவிட்டுவிட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப விழாவில் பங்கேற்ற அமெரிக்க துணை அதிபரான மைக் பென்ஸ், வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னின் சகோதரியான கிம் யோ-ஜாங்கையும், மற்ற பிரதிநிதிகளையும் சந்திப்பதற்கு திட்டமிட்டிருந்ததாக அமெரிக்க அரசின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பு நடந்திருந்தால் இதுவே டிரம்ப் நிர்வாகத்துக்கும், வட கொரியாவுக்குமிடையே நிகழ்ந்த முதல் அதிகார பூர்வ உரையாடலாக இருந்திருக்கும்.

அமெரிக்கா தெரிவித்துள்ள இந்த விடயங்கள் தொடர்பாக வட கொரியா இதுவரை கருத்தேதும் தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் ஹெதர் நவுர்ட், வட கொரிய பிரதிநிதிகளுடன் சுருக்கமான சந்திப்பை மேற்கொள்வதற்குரிய வாய்ப்பு எழுந்தபோது துணை அதிபர் பென்ஸ்,” வட கொரியா தனது சட்டவிரோத பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் அணுசக்தி திட்டங்களை கைவிட வேண்டியதற்கான அவசியத்தை விளக்குவதற்கு அந்த வாய்ப்பை பயன்படுத்துவதற்கு தயாராக இருந்தார்” என்று கூறியுள்ளார்.

“கடைசி நேரத்தில் இந்த சந்திப்பை இரத்து செய்வது குறித்து வட கொரிய அதிகாரிகள் முடிவெடுத்தனர். இந்த வாய்ப்பை பயன்படுத்துவதில் அவர்கள் தோல்வி அடைந்ததற்கு நாங்கள் வருந்துகிறோம்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

தென் கொரியாவில் இருந்தபோது வட கொரிய அதிகாரிகளுடன் ராஜ ரீக பேச்சுவார்த்தையை பென்ஸ் நடத்த தவறியதாக சிலர் அவர் மீது விமர்சனங்களை வைத்துள்ளனர்.