மழையுடன் கூடிய காலநிலை…

மழையுடன் கூடிய காலநிலை…

நாட்டின் மேல், சப்ரகமுவ, தெற்கு , மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேற்கு, தெற்கு மற்றும் வடமேல் கடற்கரையோரப்பகுதிகளில் காலைவேளையில் மழை பெய்யக்கூடும் எனவும் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலைவேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

மன்னாரிலிருந்து புத்தளம், மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கேசன்துறையில் இருந்து மன்னார் ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளில் இருந்து வீசும். ஏனைய பகுதிகளில் தெற்கு முதல் தென்கிழக்கு வரையான திசைகளில் இருந்து வீசும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20 – 30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40 – 45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.