முச்சக்கரவண்டி செலுத்துதல் குறித்த விசேட கட்டளைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு..

முச்சக்கரவண்டி செலுத்துதல் குறித்த விசேட கட்டளைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு..

பொது சேவைகள் மோட்டார் ட்ரைசிகல்ஸ் (முச்சக்கரவண்டி) செலுத்துவது தொடர்பில் விசேட கட்டளைகள் உள்ளடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் கையொப்பத்துடன் மக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மோட்டார் போக்குவரத்து ஆணையாளரால் குறித்த காரணம் தொடர்பில் சாரதி அனுமதிப் பத்திரத்துடன் சிறப்பு ஒப்புதல் பத்திரம் ஒன்று வழங்கப்பட உள்ள நிலையில் அது இன்றி பொது சேவைகள் மோட்டார் ட்ரைசிகல்ஸ் (முச்சக்கரவண்டி) செலுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கட்டளையின் கீழ், குறித்த ஒப்புதல் பத்திரத்தினை பெற விண்ணப்பிக்கும் அனைவரும் 35 வயதுக்கு குறையாத 70 வயதுக்கு மேலாகாதவர்களாகவும், மோட்டார் ட்ரைசிகல்ஸ் (முச்சக்கரவண்டி) சாரதிப் பத்திரம் பெற்று குறைந்தது இரண்டு வருடங்கள் வண்டி செலுத்துதலில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் எனவும் அரச உத்தியோகபூர்வ செய்தித் தாள் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த ஒப்புதல் பத்திரத்தினை பெற்றுக் கொள்ள வைத்திய சான்றிதழ், மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தினால் திட்டமிட்டுள்ள அல்லது அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிலையத்தினூடான பயிற்சி நெறி சான்றிதழ், பொலிஸ் நற்சான்றிதழ் உள்ளிட்டவற்றுடன் 2000 ரூபா கட்டணத்துடன் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திடம் கையளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நடைமுறையானது இம்மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

R.Rishma