சனத் ஜெயசூரியவுக்கு ஐசிசி 14 நாட்கள் காலக்கெடு…

சனத் ஜெயசூரியவுக்கு ஐசிசி 14 நாட்கள் காலக்கெடு…

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் சட்ட விதிமுறைகள் இரண்டினை மீறிய குற்றச்சாட்டின் கீழ் இலங்கை அணியின் முன்னாள் தேர்வுக் குழுவின் தலைவர் சனத் ஜெயசூரியவுக்கு அவரது தரப்பில் இருந்து கருத்துத் தெரிவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று(15) முதல் 14 நாட்களுக்குள் குறித்த சட்டத்தினை மீறியமை தொடர்பில் சனத் ஜெயசூரிய அவரது சார்பில் கருத்துக்களை தெரிவிக்க முடியும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதன்படி, கீழுள்ள சட்ட விதிகள் இலங்கையின் முன்னாள் தேர்வுக் குழுவின் தலைவர் சனத் ஜெயசூரியவினால் மீறப்பட்டுள்ளதாக ஐசிசி சுட்டிக்காட்டியுள்ளது.

01/ சட்ட விதி 2.4.6

ஐசிசி ஊழல் எதிர்ப்பு ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு ஒத்துழைக்காது, சாதாரண காரணமின்றி குறித்த விசாரணைகளை நிராகரித்தமை, ஐசிசி ஊழல் எதிர்ப்பு ஒன்றியத்தினால் கோரப்பட்ட தகவல்கள் மற்றும் குறிப்புகளை முறையாக வழங்கத் தவறியமை.

02/ சட்ட விதி 2.4.7

ஐசிசி ஊழல் எதிர்ப்பு ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு தடங்கள் ஏற்படுத்தியமை மற்றும் விசாரணைகளை தாமதப்படுத்தும் வகையில், ஆவணங்களை மாற்றுதல் மற்றும் அழித்தல் உள்ளிட்ட விசாரணைகளுக்கு தேவையான சாட்சிகளை மறைத்தல்.