நியாயமான விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க தீர்மானம்…

நியாயமான விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க தீர்மானம்…

எதிர்வரும் பண்டிகை காலத்தில் சந்தையில் அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடுகளும் ஏற்பட இடமளிக்க வேண்டாம் எனவும், விலை அதிகரிப்பு ஏற்படாது நியாயமான விலையில் உணவுப் பொருட்களை நுகர்வோர் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துமாறும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பண்டிகை காலத்தின் போதான வாழ்க்கைச் செலவு தொடர்பில் நேற்று(11) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்வரும் பண்டிகை காலத்தில் சதொச நிலையங்களினூடாக சலுகை விலையில் அத்தியாவசிய உணவு பொருட்களை பெற்றுக்கொடுத்து நுகர்வோருக்கு உயர்ந்தபட்ச சலுகை வழங்குவதற்கான நடவடிக்கை தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

சந்தையில் பெற்றோலியப் பொருட்களின் விலை குறைவினால் கிடைக்கும் நன்மைகளும் நுகர்வோரை சென்றடைவதற்கான நடைமுறைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்களும் அரச அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.