பண மோசடி தொடர்பில் யாழ்.தொழில்நுட்பக் கல்லூரியின் பணிப்பாளருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை

பண மோசடி தொடர்பில் யாழ்.தொழில்நுட்பக் கல்லூரியின் பணிப்பாளருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை

பண மோசடி தொடர்பில் யாழ்.தொழில் நுட்பக் கல்லூரியின் பணிப்பாளர் என்.யோகராஜாவுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவினால் அழைப்பாணைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டில் டிப்ளோமா கற்கை நெறிக்காக 200 இற்கும் மேற்பட்ட மாணவர்களிடம் பல ஆயிரம் ரூபா பணம் வாங்கிய போதும் குறித்த கற்கை நெறிக்கான வகுப்புக்கள் நடத்தப்படவில்லை என்பதுடன் பணமும் மீள வழங்கப்படவில்லை. இதன் காரணமாகப் பாதிக்கப்பட்ட ஒருவரே பணிப்பாளருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் எழுத்து மூலமான முறைப்பாடொன்றை வழங்கியிருந்தார்.

இதன் எதிரொலியாகவே பிரதிவாதியான யாழ்.தொழில் நுட்பக் கல்லூரிப் பணிப்பாளருக்கு 2015 யூலை-24 ஆம் திகதி இடப்பட்டு அழைப்பாணைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குறித்த அழைப்பாணைக் கடிதத்துடன் முறைப்பாட்டுப் பிரதியும் இணைக்கப்பட்டுள்ளது. அழைப்பாணைக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மனித உரிமைகள் ஆணைக் குழு 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க சட்டத்தின் கீழாகக் குறித்த முறைப்பாடானது விசாரணை செய்யப்படவுள்ளது.

04.8.2015 ஆம் திகதி முற்பகல் 11 மணிக்கு யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்திற்குச் சகல பொருத்தமான ஆவணங்களுடன் ஆணைக் குழு முன்னிலையில் சமூகமளிக்க வேண்டும் என்பதைக் கருத்திற் கொள்ளவும். ஆணைக் குழுவின் முன்னிலையில் சமுகமளிக்கத் தவறும் பட்சத்தில் அது ஆணைக் குழுவின் அதிகாரத்தை அவமதித்த அல்லது அகெளரவப்படுத்திய குற்றமாகக் கருதப்படும் எனவும் அந்த அழைப்பாணைக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது