சின்ன வெங்காய விலைகளில் பாரியளவு வீழ்ச்சி…

சின்ன வெங்காய விலைகளில் பாரியளவு வீழ்ச்சி…

(FASTNEWS |COLOMBO) – யாழ்ப்பாணத்தில் பெரும்போக வெங்காய அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பல பகுதிகளில் பரவலாக சின்ன வெங்காயச் செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டதால் தற்போது வெங்காய விலையிலும் வீழ்ச்சி நிலைமை ஏற்பட்டுள்ளது.

நீர்வேலி, கோப்பாய், சிறுப்பிட்டி, புத்தூர், இடைக்காடு, நவக்கிரி, உரும்பிராய், ஊரெழு, அச்சுவேலி, மற்றும் பத்தைமேனி போன்ற பிரதேசங்களில் 1,500 வரையிலான ஹெக்ரேயர் நிலப்பரப்பில் சின்ன வெங்காயச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காலநிலைக்கு ஏற்றவாறு அதிக விளைச்சலை இம்முறை காலபோகத்தின்போது விவசாயிகள் பெற்றுள்ளனர் என மாவட்ட விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கூடுதலான செய்கையாளர்கள் வெங்காய நாற்றுக்களை பயன்படுத்தியே இம்முறை செய்கையில் ஈடுபட்டனர். தற்போது இந்த வெங்காய அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் அவை கூடுதலாக சந்தைகளுக்கு வரத் தொடங்கியுள்ளன.

முன்னர் கிலோ 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது கிலோ 90 ரூபாய்க்கு வந்துள்ளது.

சின்ன வெங்காயம் தென்பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்ற நிலையிலும் வெங்காயத்தின் திடீர் விலை வீழ்ச்சியால் செய்கையாளர்கள் பாதிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.