கொழும்பில் புத்தளத்து மக்கள் பேரணி : ஜனாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு…

கொழும்பில் புத்தளத்து மக்கள் பேரணி : ஜனாதிபதி, பிரதமரிடம் மகஜர் கையளிப்பு…

புத்தளத்திற்கு இம்மாதம்  22ஆம் திகதி வருகை தர திட்டமிட்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, அதற்கிடையில் அறுவைக்காட்டு குப்பை  திட்டத்திற்கு உறுதியான  முடிவு தர வேண்டும் எனவும் இல்லாவிட்டால் தமது விஜயத்தை  மீள்பரிசீலனை செய்ய வேண்டிய நிலையே ஏற்படும் எனவும் கொழும்பில் குப்பைக்கு எதிராக பேரணி நடத்திய  அமைப்பினர் எச்சரிக்கை விடுத்தனர். 

இன்று காலை (19) புத்தளத்திலிருந்து சுமார் 25 பஸ்களிலும் வேறு பல வாகனங்களிலும் கொழும்பு வந்து காலி முகத்திடலுக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் செய்த புத்தளம் மாவட்ட மக்களின் பேரணியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. 

சிங்கள தமிழ், முஸ்லிம்கள் என்ற இன பேதமின்றியும், கட்சி வேறுபாடுகளின்றியும் மத குருமார்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர். 

புத்தளம் குப்பைக்கு எதிரான சுலோக அட்டைகளையும், பதாதைகளையும்  தாங்கியிருந்த இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு காலி முகத்திடலில்  ஒரு அந்தத்திலிருந்து மறு அந்தம் வரை கோசமிட்டு ஊர்வலமாக சென்றனர்.  பொலிஸாரும், விசேட அதிரடி படையினரும் அந்த பிரதேசத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு இருந்ததுடன், நீர்த்தாரை பிரயோக வண்டிகளுடன் தயாராகவும் இருந்தனர்.  காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 04 மணித்தியாலமாக நீடித்தது.

பின்னர்,  மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய 07 பேர் கொண்ட குழு ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று மேலதிக செயலாளர் சமந்தி கருணாதாசவிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர். புத்தளத்தின் நிலமை தொடர்பில்  அவர்கள் அங்கு விளக்கியதுடன் இந்த திட்டத்தை ஜனாதிபதி நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினர்.

இந்த சந்திப்பின் பின்னர் கருத்த தெரிவித்த மேல் மாகாண சபை உறுப்பினர்ஏ.ஜெ.எம். பாயிஸ் கூறியதாவது.

நாங்கள் வழங்கிய மகஜர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றுக்கு நேரம் ஒதுக்கி தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். 

இந்த சந்திப்பில் சர்வமத குருமார்,  செயற்பாட்டாளர் இப்லால் மரைக்கார், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் முக்கியஸ்தர் மெளலவி மிப்லால்,  மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், நஸ்லியா காதர்  உட்பட கிளீன் புத்தளம் அமைப்பினரும் பங்கேற்றிருந்தனர். 

பின்னர், ஜனாதிபதி செயலகத்திலிருந்து பேரணியாக அலரி மாளிக்கைக்கு இவர்கள் நடந்து சென்றனர்.  குப்பைக்கு எதிரான சமூக செயற்பாட்டாளர்கள் அலரி மாளிகையில் பிரதமரின் உதவிச் செயலாளர் குசாரி, திட்டப்பணிப்பாளர் வன்னி நாயக்க ஆகியோருடன் சுமார் 1 மணித்தியாலயம் வரையில் பேச்சுவார்த்தை நடத்தி, நிலைமைகளை எடுத்துக்கூறி மகஜர் ஒன்றினையும் கையளித்தனர். 

இவைகளை கேட்டறிந்த பிரதமரின் உயர் அதிகாரிகள் இது தொடர்பில்  இன்றே அறிக்கை ஒன்றை தயாரித்து மகஜரையும் இணைத்து பிரதமரின் செயலாளரிடம் பூர்வாங்க அறிக்கை ஒன்றை கையளிப்பதாகவும், பிரதமர், அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுடன்  புத்தளம் சமூகச் செயற்பாட்டாளர்களை சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்தனர். இந்த சந்திப்பு மிகவும் சாதகமாக அமைந்திருந்ததாக சந்திப்பில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். 

இந்த ஊர்வலத்தில் புத்தளத்தைச்சேர்ந்த அரசியல் பிரமுகர்களான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நியாஸ், புத்தள நகர சபை உறுப்பினர்களான அலி சப்ரி, சிஹான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இல்யாஸ் மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ்  உட்பட புத்தளம் உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் சமூக நல விரும்பிகள், புத்தளம் கிளீன் அமைப்பு, புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் பலர் கலந்துகொண்டனர்.

(சப்னி அஹமட்)