நாட்டை சுற்றியுள்ள கடற் பிரதேசத்தில் கடும் காற்று..

நாட்டை சுற்றியுள்ள கடற் பிரதேசத்தில் கடும் காற்று..

(FASTNEWS|COLOMBO) வங்காளவிரிகுடாவில் இலங்கைக்கு வடமேல் திசையில் உருவான பானி புயல் இன்றைய தினம் திருகோணமலையில் இருந்து வடமேல் திசையில் 640 கிலோ மீற்றருக்கு அப்பால் நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு பலத்த சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இந்த கட்டமைப்பு மேலும் விருத்தியடைந்து வடக்கு திசைக்கு அழுத்தத்தை கொடுத்த வகையில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கரையோரத்தை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலும் நாட்டை சுற்றியுள்ள கடற் பிரதேசத்தில் கடும் காற்று மற்றும் கடும் மழையுடனான காலநிலை நிலவக் கூடும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். ஊவா, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மில்லி மீற்றர்க்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி பதிவாக கூடும். ஏனைய மாவட்டங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி இடம்பெற கூடும்.

இந்த சூறாவளி கட்டமைப்பு அழுத்தத்தின் காரணமாக எதிர்வரும் சில தினங்களில் நாடு முழுவதிலும் விஷேடமாக ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 3 ஆம் திகதி வரையில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள், மற்றும் கடற் தொழிலாளர்கள் மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இது தொடர்பில் தொடர்ந்து கவனம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.