கடும்போக்கின் சுற்றிவளைப்புக்குள் சிறுபான்மைப் பெரு நிலம்

கடும்போக்கின் சுற்றிவளைப்புக்குள் சிறுபான்மைப் பெரு நிலம்

(FASTNEWS|COLOMBO) – துருவப்படும் வடக்கு, கிழக்கு சமூகங்களின் உறவுகள், சிறுபான்மையினரின் எல்லைகளை வளைத்துப் போடுவதற்கு தெற்கின் கடும்போக் குக்கு வாய்ப்பளித்துள்ளது.வெற்றி பெறாது வீழ்த்தப்பட்ட விடுதலைப் போரும், துரதிஷ்டமாக நடத்தப்பட்ட ஐ.எஸ் தாக்குதலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை பயங்கரவாதத்தின் உறைவிடமாகக் காட்டுவதற்கான சந்தர்ப்பத்தையும் உருவாக்கி வருகிறது அல்லது சிலரால் இது உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறலாம்.

பிரபாகரனின் வல்வெட்டித்துறையும், சஹ்ரானின் காத்தான்குடியும் பிரிவினைவாதம், மதவாதத்தின் பிறப்பிடங்கள் என்ற சிங்களத்தின் பார்வை. வடக்கு – கிழக்கு மண்ணை தொடர்ந்தும் சந்தேகிக்கத் தூண்டி உள்ளது. இதனால் இந்தப் பெருநிலப்பரப்புக் குள்ளிருந்து எழும் அத்தனை சித்தாந்தங்களும் கடும் போக்காகக் காண்பிக்கப்பட்டு அரசியல் இலாபம் பெறும் புதிய களங்களே எம்மை எதிர் நோக்கவுள்ளன. இச்சித்தாந்தங்கள் அனைத்தும் ஆரிய இனத்துக்கு ஆபத்து என்பதை மூலதனமாக்கி ஆட்சியைப் பிடிக்கவே, தென்னிலங்கை கடும் போக்கும் தயாராகிறது.

இவ்வாறு பிடிக்கப்படும் ஆட்சியில் தமிழ் மொழிச் சமூகங்களின் தாயகம், தென்னிலங்கை கடும் போக்கின் கடுமையான கண்காணிப்பில் கொண்டு வரப்படலாம். காணிப்பங்கீடு, படையினர் வௌியேற்றம், காணாமல் போனோர் அலுவலகம், தகவலறியும் சட்டமூலம், சமஷ்டிக் கோரிக்கை, அம்பாரையில் கரையோர மாவட்டம் எல்லாவற்றையும் ஓரங்கட்டி வடக்கு, கிழக்கு மக்களின் அபிலாஷைகளை அழுங்குப்பிடிக்குள் அமிழ்த்தி வைப்பதற்கான வாய்ப்பாகவே ஈஸ்டர் தாக்குதல் பயன்படுத்தப்படுகிறது.

பயங்கரவாதம், மதவாதங்களின் பிறப்பிட மண்ணுக்கு எந்த அரசியல் தீர்வையும் வழங்க முடியாது, இவ்வாறு வழங்குவது பாகிஸ்தானின் வஸிரிஸ்தான் மாகாணத்துக்கு (பயங்கரவாதத்தின் விளைநிலம் என மேற்கு உலகம் அறிவித்த பகுதி) அதிகாரம் வழங்குவதைப் போலாகிவிடும் எனக் கூறி சர்வதேசம், ஜெனீவாவின் அழுத்தங்களிலிருந்து, தப்பிக்கும் வியூகங்களே வகுக்கப்படுகின்றன. இதனாலே தெற்கின் கடும்போக்கு அபிலாஷைகளுக்கு குறுக்காக நிற்கின்ற, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பலத்தைத் தகர்க்க, கடும்போக்கு கங்கணம் கட்டி நிற்கின்றது.

எம்மைப் பொறுத்த வரை ஓர் இனத்தின் நலன்கள் இருப்புக்கள், அரசியல், சமூக, சமய ஆதாயங்களுக்காகப் பிற கலாசாரங்களை, மதங்களை, இனங்களை இல்லாதொழிக்க அல்லது அடக்கி ஒடுக்கப் புறப்படும் சகல சித்தாந்தங்களும் கடும் போக்குவாதமே.
இந்த அடிப்படையில் எழுந்த வடக்கின் பாசிசவாதமும் கிழக்கின் மதவாதமும் கடும்போக்காகவே கருதப்பட வேண்டும். இவையிரண்டும் இப்போதைக்கு இல்லாதொழிந்துள்ளன. ஆனால் தெற்கிலுள்ள பௌத்த கடும்போக்கு மட்டும் தொடர்ந்து பிழைத்து வருகிறதே! ஏன்?

ஒன்று – இந்த சக்திகள் அடையாளம் காணப்படாமலுள்ளதா? அல்லது அரசியலில் சக்தி பெற்றுள்ளதா? என்ற ஆராய்ச்சியே, பேரினவாதச் சுற்றி வளைப்பிலிருந்து தமிழ் மொழிச் சமூகங்களின் பூர்வீகத்தை மீட்டெடுக்கும்.

வடக்கிலிருந்து 36 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள தமிழகத்தின் இருப்பும் திராவிடர்களின் அரசியல் பலமும் இலங்கையில் உள்ள சுமார் இரண்டு கோடி ஆரிய பௌத்த சிங்களவர்களுக்குச் சவால் என்பதே,தெற்கிலுள்ள கடும் போக்கின் நிலைப்பாடு. இதை உணர்ந்தே விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்ததாக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்காலத் தலைமை போர்க் களத்தில் தோள் நிமிர்த்தியது. இக்களத்தில் ஒன்றாகத் தோள் நிமிர்த்தி நிற்காமல் தோற்றுப்போன தமிழ்,முஸ்லிம் சமூகங்களின் அபிலாஷைகளை எவ்வாறு வெல்ல முடியும்?
இவ்வாறு வெல்லச் சாத்தியமான இத்தலைமைகளின் ஒன்றுபடலுக்கான கள நிலவரங்களை எம்மை விட்டுத் தூரப்படுத்துவது யார்?.

தமிழர்கள் விரும்பாத பாசிசத்தையும், முஸ்லிம்கள் விரும்பாத மதவாதத்தையும் ஒட்டு மொத்தமாக இச்சமூகங்களில் திணித்து, சிங்கள தேசத்தின் எதிரிகளாகக் காட்டுவதில் தென்னிலங்கை கடும் போக்கு, எப்போதும் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த வெற்றியே சிறுபான்மைச் சமூகங்களின் அபிலாஷைகளுக்குத் தடையாகவும் உள்ளது.

ஒருவாறு 2015 இல் ஒன்றுபட்டு, தெற்கின் கடும்போக்கை, சிறுபான்மைச் சமூகங்கள் வீழ்த்தியதைப் பொறுத்துக் கொள்ளாத, தெற்குச் சக்திகள் எதிர்வரும் தேர்தலில் சிறுபான்மைத் தலைமைகள் ஓரணியில் ஒன்றிணையாமல் தடுக்க,எம்மத்தியில் ஆழமாக ஊடுருவியுள்ளன. இதன் வௌிப்பாடுகளே இன்று கல்முனை முதல் கண்டி, குருநாகல் வரை வியாபித்துள்ளன.

எமது சமூகங்களின் துருவப்படுத்தலை கனகச்சிதமாகக் கையாளும் தென்னிலங்கை கடும்போக்கு,இம்முயற்சிகளைத் தோற்கடிக்கும் வியூகங்களில் ஒன்றிணையாமலும் தமிழ், முஸ்லிம் தலைமைகளைச்,சங்கடத்துக்குள் மாட்டுகின்றது. இதற்காகவே சிறுபான்மைச் சமூகங்களின் அங்கீரிக்கப்பட்ட தலைமைகளுக்கு எதிராக சில சுயபோக்கு சிந்தனைகள் களமிறக்கப்பட்டுள்ளன.

ஜனநாயக அரசைக் கவிழ்க்கும் ஒக்டோபர் சதிப் புரட்சிக்குத் துணை போகாத, சிறுபான்மை மிதவாதத் தலைமைகளைக் குப்புற வீழ்த்துவதற்கு ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத் தாக்குதல்களை ஒவ்வொரு தளங்களிலும் வெவ்வேறாகச் சித்தரித்தே, அரசியல் களங்கள் சூடாக்கப்படுகின்றன.

2005 முதல் 2015 வரையிலான ஆட்சிக்காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்த முனைந்து தோற்றுப்போன ராஜபக்ஷவினர்,சில ஒட்டுக் குழுக்களைப் பயன் படுத்தி வடக்கில் காலூன்ற முயன்றதையும் தமிழர்கள் மறப்பதற்கில்லை. ஆனால் பணம், அதிகாரம், அடக்கு முறைகளுக்குள் தமிழர்களின் அபிலாஷைகளை அச்சுறுத்த முடியாதென்பதை அடிக்கடி நிரூபித்த தமிழர்களின் ஏக பிரதிநித்துவம் இன்று சிலரால் சீரழிக்கப்படுகிறது . தமிழர்களின் எதிர்காலத்தை இருளில் மூழ்கடித்து ஒரு சிலருக்கு மாத்திரம் அமைச்சு, சொகுசு வாழ்க்கைகள் விலை பேசப் பட்டுள்ளதன் எதிரொலிகளே இவை. முஸ்லிம்களுக்குத் துணைபோவதாகக் காட்டி தமிழ் தேசிய கூட்டமைப்பை ஓரங்கட்டுவதால் இருவிடயங்களைச் சாதிக்கத் துடிக்கிறது தெற்கு.

கிழக்கில் இனமுரண்பாட்டைத் தோற்றுவித்து, அரசியல் தீர்வு விடயங்களைத் தள்ளிப்போடல், தமிழர்களின் ஏகபிரதிநிதித்துவத்திடமிருந்து பிடுங்கப்படும் வாக்குகளை தம்வசம் ஈர்த்துக் கொள்ளல், இதற்காகவே கல்முனை விடயத்தில் சில கடும்போக்கு இனவாதிகள் அனுதாபப்படத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. இவ்விடயத்தில் முஸ்லிம் தரப்புக்களும் விட்டுக் கொடுப்பதில்தான் எமது துருவப்படுத்தலை நெருக்கமாக்க முடியும்.வடக்கு, கிழக்கு இணைப்புக்கு இணங்காத முஸ்லிம்கள், என்ற எடுத்தெறிந்த பேச்சும்,கல்முனை வடக்குத் தமிழர்களின் அபிலாஷைகளுக்கு குறுக்காக நிற்கும் அடிப்படைவாதிகளுடன் கூட்டில்லை என்று முஸ்லிம் சமூகத்தை தனிமைப்படுத்தும் எத்தனங்களும் எதற்காகச் செய்யப்படுகிறது.

எனவே முஸ்லிம்களிடத்தில் சில விடயங்களில் பெருந்தன்மை தேவைப்படுகிறது. இல்லாவிட்டால் தமிழர்களின் எதிரிகள் முஸ்லிம்கள் என்ற தோற்றத்தை உருவாக்கும் தெற்கின் போக்கு வெற்றியளிக்கலாம்.இந்த வெற்றிகள், கடும் போக்கு ஆட்சியைப் பிடித்த பின்னர் சகலருக்கும் ஏனென்று தெரியவரும்.

சுஐப் எம். காசிம்