நிதியமைச்சர் கையெழுத்திட்ட நாணயத்தாள் சட்ட ரீதியானதா – விமல்

நிதியமைச்சர் கையெழுத்திட்ட நாணயத்தாள் சட்ட ரீதியானதா – விமல்

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கையெழுத்திட்ட நாணயத்தாள் சட்ட ரீதியானதா? அல்லது சட்ட விரோதமானதா? அது செல்லுபடியாகுமா? இல்லையா? என்பது தொடர்பான கேள்வி நாட்டில் இன்று எழுந்துள்ளது என விமல் வீரவன்ச எம்.பி. நேற்று(7) சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று(7) புதன்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே விமல் வீரவன்ச எம்.பி. இவ்வாறு தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

மத்திய வங்கியின் பிணை முறிகள் தொடர்பான மோசடிகளை வெளியே கொண்டு வருவதற்கு உதவிய நேர்மையான உத்தியோகத்தர்களுக்கு எதிராக இன்று பழிவாங்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பலர் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.

இன்னும், முதன் முறையாக மத்திய வங்கி ஆளுநர் தலைமையில் வெளியிடப்பட்ட நாணயத் தாள்களில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கையெழுத்திட்ட நாணயத்தாளின் செல்லுபடித்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.

மேலும், அரச நிறுவனங்களில் தேசிய கீதம் இசைக்கப்படும் சம்பிரதாயம் மத்திய வங்கியில் மீறப்பட்டுள்ளது.

மத்திய வங்கியில் இன்று தேசிய கீதம் இசைக்கப்படுவதில்லை.

இன்று வங்கிகள், மத்திய வங்கி, பொருளாதாரம் என நிறுவனங்களின் அதிகாரங்கள் நிதியமைச்சரிடமிருந்து பறிக்கப்பட்டு வேறு வேறாக பலரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு நிலையில் ரூபாவின் மதிப்பு நாட்டில் குறைவடைந்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் யுத்தம் முடிக்கப்பட்டது மட்டுமின்றி, நாட்டின் பொருளாதார ஸ்தீரத்தன்மையும் பாதுகாக்கப்பட்டது.

சோஷலிசம் பேசும் அன்று விவசாயிகளை கோவணம் உடுத்தி வீதியில் இறக்கி போராட்டங்களை நடத்திய ஜே.வி.பி.யின் வாய்கள் இன்று விவசாயிகள் நெல்லை விற்பனை செய்து கொள்ள முடியாது தவித்துக் கொண்டிருக்கையில் மூடப்பட்டுள்ளன. வீதியில் கோவணப் போராட்டங்களை காண முடியவில்லை.

ஏனென்றால் ஜே.வி.பியினர் இன்று இணக்கப்பாட்டு அரசியல் செய்வதால் அமுக்கி வாசிக்கின்றனர்.

இணக்கப்பாட்டு அரசியலையும் ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்த உதவியதால் இன்று சபையில் உரையாற்றுவதற்கு அதிக நேரம் வழங்கப்படுகிறது.

தேர்தலில் போட்டியிட்டு 4 உறுப்பினர்களை பெற்றுக் கொண்டு இரண்டு போனஸ் ஆசனங்களை பெற்றுக் கொண்ட ஜே.வி.பி.யிக்கு சபையில் உரையாற்ற அதிக நேரம் வழங்கப்படுவது அநீதியான செயற்பாடாகும் எனவும் தெரிவித்தார்.

 

(riz)