ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ள பைடனுக்கு அழைப்பு

ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ள பைடனுக்கு அழைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | டோக்கியோ) – இந்த கோடையில் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அழைப்பு விடுக்க எதிர்பார்த்துள்ளதாக ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா இன்று தெரிவித்தார்.

ஏப்ரல் மாத தொடக்கத்தில் ஜப்பான் பிரதமரின் அமெரிக்காவுக்கான விஜயத்தின்போது அவர் இந்த அழைப்பினை பைடனுக்கு விடுக்கவுள்ளதாக சுகா சட்டமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.

இதேவேளை இந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கை நடத்தும் யோசனையை அனைத்து ஜி-7 உறுப்பு நாடுகளும் ஆதரித்ததாகவும் பிரதமர் கூறினார்.

2020 டோக்கியோ ஒலிம்பிக்கை கடந்த கோடையில் ஜப்பான் நடத்தவிருந்தது. ஆனால் கொரோனா தொற்றுநோய் காரணமாக அது இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி எதிர்வரும் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும்.

இதனிடையே இம் மாத தொடக்கத்தில், டோக்கியோ ஒலிம்பிக்கின் அமைப்பாளர்கள் வெளிநாட்டு பார்வையாளர்களை விளையாட்டுகளில் அனுமதிக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.