மோடிக்கு எதிர்ப்புத் தெரிவித்த போராட்டத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

மோடிக்கு எதிர்ப்புத் தெரிவித்த போராட்டத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | பங்களாதேஷ்) – பங்களாதேஷ் காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையிலான புதிய மோதல்களின் விளைவாக நேற்று(28) இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் இந்து-தேசியவாத தலைவரான நரேந்திர மோடியின் விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பங்களாதேஷில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 13 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

டாக்கா-மைமென்சிங் நெடுஞ்சாலையில் நேற்று காலை 10 மணியளவில் ஏற்பட்ட மோதலில் பொலிசார் உட்பட மொத்தம் 6 பேர் காயமடைந்தனர்.

போராட்டக்காரர்களை கலைக்க போலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர்.

168 மில்லியன் மக்களைக் கொண்ட முஸ்லிம் பெரும்பான்மை நாடானா பங்களாதேஷ் முழுவதும் பல முக்கிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதனால் வெள்ளிக்கிழமை ஐவர் உயிரிழந்தனர், சனிக்கிழமை ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையிலேயே கிராமப்புற நகரமான சரேலில் நேற்று ஏற்பட்ட மோதல்களில் அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், பிரம்மன்பேரியாவின் கிழக்கு மாவட்டத்தில், 19 வயது மற்றும் 23 வயதுடைய இரண்டு பேர் உயிரிழந்ததாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் உறுதிபடுத்தியுள்ளார்.

எதிர்ப்பாளர்கள் ஒரு நெடுஞ்சாலை காவல் நிலையத்தைத் தாக்கி, அதை தீக்கரையாக்கியுள்ளனர். இதனால் குறைந்தது 35 பொலிஸார் காயமடைந்தனர். இதன்போதே தற்காப்புக்காக பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பங்களாதேஷ் நாட்டின் சுதந்திர பொன் விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு, இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டார்.

மோடியின் விஜயத்துக்கு பங்களாதேஷிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மோடி பங்களாதேஷுக்கு வந்து சேர்ந்த வெள்ளிக்கிழமை முதல் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில் போராட்டங்களை நிறுத்துமாறு பங்களாதேஷின் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

COMMENTS

Wordpress (0)