அரசியல் கட்சிகள் ஆறினையே நாடாளுமன்றம் ஏற்கும் – சபாநாயகர்

அரசியல் கட்சிகள் ஆறினையே நாடாளுமன்றம் ஏற்கும் – சபாநாயகர்

அரசியல் காட்சிகளில் ஆறு கட்சியினை மட்டுமே நாடாளுமன்றம் ஏற்றுக் கொள்ளும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

எட்டாம் நாடாளுமன்றின் அங்கம் வகிக்கும் மொத்த அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் எண்ணிக்கை ஆறாகும்.

எவ்வாறிருப்பினும் நாடாளுமன்றில் 17 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றனர்.

எனினும், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றம் தெரிவான அனைத்து உறுப்பினர்களும் ஆறு அரசியல் கட்சிகளின் கீழேயே போட்டியிட்டிருந்தனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கு நாடாளுமன்றில் சந்தர்ப்பம் வழங்குவது தொடர்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

ஆறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் இந்த விடயத்தில் இணக்கம் காணப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றில் கட்சித் தலைவர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும், முன்வரிசை ஆசனம் வழங்கப்பட வேண்டும், உரைகளை நிகழ்த்த நேரம் ஒதுக்கப்பட வேண்டமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, தினேஸ் குணவர்தனவின் தலைமையிலான மஹஜன எக்சத் பெரமுன, உதய கம்மன்பில தலைமையிலான பிவிதுரு ஹெல உறுமய, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி போன்ற கட்சிகள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இதேவேளை, எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்க ஆளும் கட்சி இவ்வாறு சந்தர்ப்பம் மறுத்து வருவதாக சுதந்திரக் கூட்டமைப்பின் சில கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.