வெலே சுதாவின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு

வெலே சுதாவின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு

பிரபல சர்வதேச போதைப்பொருள் வர்த்தகரான வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை விதானகே சமன் குமாரவை குற்றவாளியாக இனங்கண்ட மேல் நீதிமன்ற நீதிபதி பிரித்தி பத்மன் சுரசேன, நேற்று புதன்கிழமை (14), மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

குறித்த இவர், ஜனவரி 12ஆம் திகதி முதல் இரகசியப் பொலிஸாரின் தடுப்பில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து இன்றைய தினமே(அதாவது நேற்று) மேன்முறையீடு செய்துள்ளதாகவும், வெலே சுதாவின் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி சுரங்க பண்டார தெரிவித்தார்.

7.05 கிராம் தூய்மையான ஹெரோய்னை தன்வசம் வைத்திருந்தார் மற்றும் 4.05 கிராம் ஹெரோய்னை விற்பனைக்காக வைத்திருந்தார் ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழே, சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவருக்கு எதிராக மற்றுமொரு பாரிய ஹெரோய்ன் கடத்தல் தொடர்பிலான வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலேயே மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு நேற்று புதன்கிழமை வழங்கப்பட்டது. வெலே சுதாவுக்கு எதிராக சர்வதேச பொலிஸ் ஊடாக சிவப்பு அறிவித்தல் (ரெட் நோட்டீஸ்) விடப்பட்டிருந்த நிலையிலேயே பாகிஸ்தானில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தப்பட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டார்.

இந்த வழக்கின் தீர்ப்பு, நேற்று வழங்கப்படும் என்று செப்டெம்பர் 23ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர், சிறைச்சாலை வாகனத்தில்  தனியாக காலை 9.20க்கு அழைத்து வரப்பட்டார். கொழும்பு மேல் நீதிமன்றத்தின் பாதுகாப்புகள் வழமையை விடவும் நேற்றைய தினம் அதிகரிக்கப்பட்டிருந்தன.

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கியிருந்தனர். அத்துடன், வழக்கு விசாரிக்கப்பட்ட கொழும்பு மேல் நீதிமன்றத்தின் இரண்டாம் இலக்க அறைக்குள் சென்ற சட்டத்தரணிகள் உள்ளிட்ட சகலரும் உடற்சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். வெலே சுதா கூண்டில் நிற்க, ஏதாவது கூற விரும்புகிறீர்களா, என நீதிபதி, வெலே சுதாவைப்பார்த்து வினவினார். அதற்குப் பதிலளித்த வெலே சுதா, ‘சம்பவ தினத்தன்று நான் வேறு விடயமாக நீதிமன்றத்துக்குச் சென்றேன். அங்கு நின்றிருந்த போதைப்பொருள் பணியகத்தின் உளவுப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்டேன். 84 கிராம் ஹெரோய்னை வைத்திருந்ததாகவே என்னைக் கைது செய்திருந்தனர்’ என்றார். அவரது கூற்றை நீதிபதி நிராகரிக்க, காலை 10.16க்கு அந்த அறையின் கதவுகள், யன்னல்கள் மூடப்பட்டன. ஒளிர்ந்துகொண்டிருந்த மின்குமிழ்கள் அணைக்கப்பட்டன. மின்விசிறிகளும் நிறுத்தப்பட்டன. நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் எழுந்துநிற்க, இருட்டறைக்குள் வைத்து நீதிபதி, 125 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பின் சுருக்கத்தை  வாசித்தார். இந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட சகல சாட்சிகளையும் பார்க்கின்ற போது, குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் முறைப்பாட்டுத் தரப்பினரால் எவ்விதமான சந்தேகமும் இன்றி நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆகையினால், குற்றஞ்சாட்டப்பட்டவரை குற்றவாளியாக இனங்கண்ட இந்த நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கின்றது. ஜனாதிபதி நியமிக்கின்ற தினம் மற்றும் நேரத்தில் வெலிக்கடை சிறைச்சாலையில், உடலிலிருந்து உயிர் பிரியும் வரையில் வெலே சுதாவின் கழுத்தில் தூக்குமாட்டி மரணதண்டனையை நிறைவேற்றவேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் மேலும் குறிப்பிட்டார். தீர்ப்பை வாசித்துவிட்டு  அதன் கீழ் கையொப்பமிட்ட பேனையை உடைத்து வீசிவிட்டு நீதிமன்ற அறையிலிருந்து நீதிபதி வெளியேறினார். தீர்ப்பளிக்கப்பட்டதன் பின்னர், சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டார். அவர், வெலே சுதாவை சோதித்ததன் பின்னர், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

இவர், ஜனவரி 12ஆம் திகதி முதல் இரகசியப் பொலிஸாரின் தடுப்பில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து இன்றைய தினமே (நேற்று) மேன்முறையீடு செய்துள்ளதாக, வெலே சுதாவின் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி சுரங்க பண்டார தெரிவித்தார். இதேவேளை, இந்த வழக்கு விசாரணையிலிருந்தபோது, வெலே சுதா கீழ்க்கண்டவாறு சாட்சியமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அந்தச் சாட்சியத்தின் சுருக்கம் ‘மாதம்பேயிலுள்ள அப்பாவின் 12 ஏக்கர் தென்னந் தோட்டத்தில் மூன்று மாதங்களுக்கொருமுறை பறிக்கப்படுகின்ற தேங்காய்களில், அரை லொறி தேங்காய்களை அப்பா எனக்குத் தருவார். தேங்காய், அன்னாசி, முட்டை ஆகியவற்றை விற்று, என் மனைவியுடன் இணைந்து, கறுவாத்தோட்டம், கொள்ளுப்பிட்டி, இராஜகிரிய ஆகிய இடங்களில் வீடுகளைக் கொள்வனவு செய்தேன். மூன்று பிள்ளைகளையும் கொழும்பிலுள்ள உயர்ரக சர்வதேசப் பாடசாலையில் சேர்த்தேன். அவர்கள் பாடசாலைக்குச் சென்று வருவதற்கு இலகுவாக, அந்தப் பாடசாலைக்கு முன்பாக உள்ள வீட்டுத் தொகுதியில் வீடொன்றையும் கொள்வனவு செய்தேன்’, அவர் தனது சாட்சியத்தில், ‘போலியான கடவுச் சீட்டினூடாக நான் இந்தியாவுக்குச் சென்றதன் பின்பு, மனைவி, தன் பிள்ளைகளுடன் அங்கு வந்தார். அதன் பின்னர் நாங்கள் சிங்கப்பூருக்குச் சென்று, சுற்றுலா மேற்கொண்டோம். அந்தப் போலியான கடவுச் சீட்டைப் பயன்படுத்தி, பல தடவைகள் இலங்கைக்கு வந்து இந்தியாவுக்கும் பயணித்தேன்’ என்றார்.

‘நான் சிறையிலிருந்து வெளியேறிய 2011ஆம் ஆண்டு, துமிந்த சில்வாவுடன் இணைந்து கொண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக அவருக்கு உதவினேன். என்னுடைய மனைவியின் பெயரில் மக்கள் வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்த இரண்டு கோடி ரூபாய் பெறுமதியிலான பணம் மற்றும் தங்க நகைகளை இரகசியப் பொலிஸார் முடக்கி விட்டனர். எனக்கு சகோதர, சகோதரிகள் ஐந்து பேர் இருக்கின்றனர். அப்பாவிடமிருந்த காரில், எங்கள் அறுவரையும் பாடசாலைக்கு அழைத்துச் செல்வார். எனினும், எனக்கு எழுதவோ, வாசிக்கவோ தெரியாது. எனினும், மனைவியினால் மில்கோ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட வியாபாரத்தின் ஊடாக காணி உறுதிப் பத்திரங்களைப் பெற்று, வட்டிக்குப் பணம் கொடுத்து, அந்த முதல் மற்றும் வட்டியை வைத்து, வீடு, காணிகளை வாங்கினோம். எனினும், அக்காலத்தில் நான், சிறையிலேயே இருந்தேன்’. ஹெரோய்னை எப்படி இலங்கைக்குக் கொண்டு வந்தீர்கள் என்று, நீதிபதி அன்று கேள்வி கேட்க, ‘நீதிமன்றத்திலிருந்த ஊடகவியலாளர்கள் மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளை, மன்றிலிருந்து வெளியேற்றுமாறு நீதிபதியிடம் வெலே சுதா வினயமாகக் கேட்டுக் கொண்டார். அதனையடுத்து, அவர்கள் மன்றிலிருந்து வெளியேற்றப்பட்டதன் பின்னர், அதற்குப் பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

2012-09-05

வெலே சுதா என்பவருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் சொந்தமான 185 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை கொழும்பு மேல் நீதமன்றத்தினால் முடக்கிவைக்கப்பட்டன. 5 ஆடம்பர வீடுகள், பி.எம்.டபிள்யூ. ரேஞ்ச் ரோவர், பிராடோ ரகங்களைச் சேர்ந்த மூன்று வாகனங்கள் மற்றும் பல மில்லியன்  ரூபாய் பெறுமதியான நகைகள் என்பனவும் அடங்கியிருந்தன.

2014-08-01

களனி பிரதேசத்தில் வைத்துக் கைப்பற்றப்பட்ட 85 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளின் சொந்தக்காரர் என தெரிவிக்கப்படும் ‘வெலே சுதா’ என்ற சந்தேகநபரின் மனைவி மற்றும் மாமியார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

2015-01-27

நாடாளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வாவின் கணக்கு விவரங்களை திரட்டுவதற்காக, அனைத்து நிதி நிறுவனங்களிலும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி.

2015-01-28

வெலே சுதாவால் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 9189 எனும் இலக்கத்தை கொண்ட மோட்டார் கார்,  ஓபவத்த, மாதிவெல, கோட்டே எனும் பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்டது.

2015-02-05

வெலே சுதாவுக்கு  எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக சந்தேகநபரை இரகசிய பொலிஸார், நீதிமன்றத்தில் 05ஆம் திகதி ஆஜர்படுத்தவில்லை.

2015-02-16

வெலே சுதாவினால் களனி, சிங்காரமுல்லை பிரதேசத்தில் நடத்தப்பட்டு வந்த போதைப்பொருள் களஞ்சியசாலை சோதனையிடப்பட்டதில், அங்கிருந்து கியர் பெட்டிகளற்ற 26 பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட டிரெக்டர் வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த டிரெக்டர் வண்டிகளிலுள்ள கியர் பெட்டிகளை அகற்றி, அவ்விடங்களில்; சுமார் 20 கிலோகிராம் போதைப்பொருளை வைத்து கடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்தனர். அந்தக் களஞ்சியசாலையானது, மாதத்துக்கு 1 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் அடிப்படையில் பிரித்தானியாவைச் சேர்ந்த ஜெரோம் டக்ளஸ் என்பவரால் வாடகைக்குப் பெறப்பட்டுள்ளது. இருப்பினும் அதில், இக்ரம் மற்றும் இம்ரான் என்ற பெயர்களைக் கொண்ட பாகிஸ்தானியர்கள் இருவரே சேவையில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்று விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருந்தது.

2015-03-23

ஹெரோயின் விற்பனையில் 17 கோடி ரூபாய்க்கு அதிகமான பணம் மற்றும் சொத்துகளை குவித்த வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை வித்தானகே சமந்த குமாரவுக்கு எதிராக வழக்கின் குற்றப்பத்திரத்தில் இருக்கின்ற குறைபாடு காரணமாக அவ்வழக்கை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது என்று அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரண அனுர மெத்தேகொட தெரிவித்திருந்தார். வெலே சுதாவுக்கு எதிரான வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா டி லிவேரா தென்னகோன் முன்னிலையில் திங்கட்கிழமை (23) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. பிரதிவாதியொருவர் ஒரு வருடத்துக்குள் ஒரே மாதிரியாக குற்றங்கள் எவ்வளவு செய்தாலும் மூன்று சம்பவங்களுக்கான குற்றச்சாட்டுகள் மட்டுமே ஒரு வழக்குக்குள் உள்ளடக்கப்படவேண்டும் என்று குற்றவியல் தண்டனை கோவைச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று சட்டத்தரணி மெத்தேகொட சுட்டிக்காட்டினார்.

ஆகையால், வழக்கை தொடர்ந்து முன்கொண்டுசெல்ல முடியாது என்றும் அவர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார். இதுதொடர்பில் எழுத்துமூலம் சமர்ப்பிக்குமாறு பிரதிவாதிக்கு அறிவுறுத்திய நீதிபதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

2015-05-17

வெலே சுதாவின் சகோதரரான கம்பளை விதானவே இந்திக, (வயது 35) 2 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோய்னுடன் கொஹவல, கடவத்தை வீதியிலுள்ள வீடொன்றுக்கு அருகில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (17) கைது செய்யப்பட்டார்.

2015-06-09

வெலே சுதாவின் கறுப்புப் பணத்தை வங்கிகளில் வைப்பிலிட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பிலியந்தலையை வசிப்பிடமாகக் கொண்ட பெண்ணை, எதிர்வரும் 19ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டிருந்தார்.

2015-08-13

துமிந்த சில்வா, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது நான் அவரின் கீழ் பணியாற்றினேன். அச்சந்தர்ப்பத்தில், தேர்தல் பிரசாரத்துக்காக என்னிடம் 20 இலட்சம் ரூபாயைக் கேட்டார். அந்தப் பணத்தைக் கொடுத்தேன். நான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதன் பின்னர் என்னுடைய வீட்டுக்கு வெள்ளைவேனும் பொலிஸாருமே எந்தநேரமும் வந்தனர் என்று வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை விதானகே சமந்த குமார, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வாக்குமூலமளித்திருந்தார்.

2015-09-22

வெலே சுதாவிடமிருக்கும் அலைபேசி இலக்கங்களில் 85 இலக்கங்கள் சிறைச்சாலை அதிகாரிகளுடையது என்று இரகசிய பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். பிரபல போதைப்பொருள் வர்த்தகரான வெலே சுதா என்றழைக்கப்படும் சமந்த குமார விதானகேயிடம் 184 அலைபேசி இலக்கங்கள் இருக்கின்றன என்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர், நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

2015-09-23

வெலே சுதாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி வழங்கப்படும் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் 23ஆம் திகதி அறிவித்திருந்தது.

2015-09-28

வெலே சுதாவின் சகோதரன், 5 கிராம் மற்றும் 100 மில்லிகிராம் ஹெரோயினுடன் தெஹிவளையில் வைத்து பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.

2015-10-14

வெலே சுதாவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

(நன்றி – தமிழ் மிரர்)