சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் ஜகீர் கான்

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் ஜகீர் கான்

சர்வதேச மற்றும் முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜகீர் கான் இன்று(15) அறிவித்துள்ளார். இருப்பினும் மேற்கொண்டு ஒரு ஐ.பி.எல் போட்டியில் விளையாட உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக திறமையான பந்துவீச்சினை வெளிப்படுத்த முடியாதது வருத்தமளிப்பதாகவும், அதனால் இத்தகையதொரு முடிவினை தாம் எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “என்னுடன் விளையாடிய அனைத்து சக வீரர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். 2011-ம் ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது மறக்க முடியாத அனுபவம். கடந்த 20 ஆண்டுகளாக கிரிக்கெட் மட்டுமே எனது வாழ்க்கையாக இருந்தது. அது ஒன்றே எனக்கு நன்றாக தெரிந்த விஷயம். அழகான, அற்புதமான நினைவுகளுடன் கிரிக்கெட் வாழ்க்கை பயணத்தில் இருந்து விடைபெறுகிறேன். மேலும் ஐ.பி.எல். 9-வது சீசன் போட்டிகளில் விளையாட உள்ளேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

37 வயதான ஜகீர் கான் 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 311 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல், 200 ஒருநாள் போட்டிகளில் 282 விக்கெட்டுகளையும், 17 டி20 போட்டிகளில் 17 விக்கெட்டுக்களையும் எடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு வெல்லிங்டன் நகரில் நடைபெற்ற நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியும், 3 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியும் இவரது கடைசி சர்வதேச போட்டிகள் ஆகும்.

2000-ல் வங்காளதேச அணிக்கு எதிராக தனது டெஸ்ட் பயணத்தையும், அதே ஆண்டு கென்யாவிற்கு எதிராக ஒருநாள் போட்டி பயணத்தையும் ஜகீர் கான் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.