✍️ கொரோனா உடல்கள் அடக்கம் எவ்வாறு அடக்கப்படுகின்றன?

✍️ கொரோனா உடல்கள் அடக்கம் எவ்வாறு அடக்கப்படுகின்றன?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா உடல்கள் அடக்கம் எவ்வாறு அடக்கப்படுகின்றன என்பதற்காக தெளிவான விளக்கம் ஒன்று முகநூல் ஊடாக காணக்கிடைத்தது. அதனை நாம் இங்கு பகிர்ந்து கொள்கிறோம்

நாடுபூராகவும் – கொரோனா தொற்றால் மரணிக்கும் உடல்களில் நல்லடக்கத்துக்கானவை , ஓட்டமாவடி – மஜ்மா நகரில் அடக்கப்படுகின்றன.

அந்தவகையில் ,528 உடல்கள் மஜ்மா நகரில் நேற்று ( 09.06.2021) வரை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் , முஸ்லிம் ஜனாஸாக்கள் – 500.
கிறிஸ்தவர்கள் – 12
இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் – 10
பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் – 4
வெளிநாட்டு பிரஜைகள் – 2 .

மஜ்மா நகரில் – 1000 உடல்களை நல்லடக்கம் செய்ய முடியுமென கூறப்பட்டுள்ளது. அதன் பிற்பாடு – வேறொரு இடம் தெரிவு செய்யப்பட்டு நல்லடக்கம் தொடரும் என்றும் ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த கருத்து இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
கொரோனா தொற்றால் மரணிக்கும் உடல்களின் நல்லடக்கத்தில் குடும்பத்தினர் சார்பாக இருவர் மாத்திரமே கலந்துகொள்ள முடியும் என்பதால் – அங்கு என்ன நடக்கிறது ? முஸ்லிம் ஜனாஸாக்களுக்குரிய கடமைகள் நிறைவேற்றப்படுகின்றதா ? போன்ற ஐயங்களும் – அங்கு நடப்பவற்றை அறிந்து கொள்ளும் ஆவலும் எம்மில் அதிகம் பேருக்கு உண்டு.
அங்கு நடப்பவற்றை பார்ப்போம்..

( முஸ்லிம் ஜனாஸாக்களே – அதிகம் நல்லடக்கம் செய்யப்படுகின்றது என்பதால் , முஸ்லிம் ஜனாஸாவுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி இங்கு பேசுவோம் )

முஸ்லிம் நபரின் ஜனாஸா – குளிப்பாட்டப்படுகின்றதா ? என்ற கேள்விக்கான பதில் – இல்லை என்பதாகும்.

அதேபோல் – ” கபன்” செய்யப்படுகின்றதா? என்ற கேள்விக்குரிய பதிலும் இல்லை என்பதுதான்.

மரணித்த நபர் – அவர் மரணிக்கும் போது எந்த ஆடையை அணிந்திருந்தாரோ அதே ஆடையுடனேயே அடக்கம் செய்யப்படுவார்.

வைத்தியசாலையிலுள்ள பிரேத அறையில் இருக்கும் ஜனாஸாவை – அந்த ஜனாஸாவின் குடும்பத்தினர் இருவர் பார்வையிட அனுமதிக்கப்படுவர்.

குடும்பத்தினரே – பலகையால் செய்யப்பட்ட ஜனாஸா பெட்டியை கொண்டு செல்ல வேண்டும்.
ஜனாஸாவை பார்வையிட்ட பின்னர் , பொதி செய்யப்பட்டு – அந்த ஜனாஸா பெட்டிக்குள் வைத்து “சீல்” வைக்கப்படும். நிலைமையைப் பொறுத்து – ஜனாஸா தொழுகையை அந்த இடத்திலும் நிறைவேற்றலாம். அல்லது , அடக்கம் செய்யப்படும் இடத்திலும் ஜனாஸா தொழுகையை நிறைவேற்ற முடியும்.

தொழுகையை அடுத்து – அந்த ஜனாஸா பெட்டியை – இராணுவம்/ பொலிஸ் பொறுப்பேற்கும்.
குடும்பத்தினர் – வாகனம் கொண்டு சென்றால் , ஜனாஸா அந்த வாகனத்தில் ஏற்றப்படும். இல்லையேல் – வைத்தியசாலை அம்பியுலன்ஸில் ஏற்றப்படும்.

பின்னர் , ஜனாஸா மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை பொலிஸார் பெற்றுக் கொள்வர்.

ஜனாஸா வாகனத்தில் – சாரதி மற்றும் அவருக்கு அருகில் குடும்ப உறுப்பினர் ஒருவர் இருப்பார். வேறு யாருமே அந்த வாகனத்தில் பயனிக்க முடியாது.

ஜனாஸா வாகனத்துக்கு முன்னால் – இரானுவ வாகனம் பாதுகாப்புக்காக செல்ல அதனை தொடர்ந்து ஜனாஸா வாகனமும் அதன் பின்னால் PHI மற்றும் சுகாதார துறையினர் பயனிக்கும் வாகனம் செல்லும்.

மஜ்மா நகரை அடையும் வரை – எந்தவொரு இடத்திலும் எந்தவொரு காரணத்துக்காகவும் வாகனங்கள் நிறுத்தப்படமாட்டாது.

மஜ்மா நகர் – கிழக்கு மாகாணம் , மட்டக்களப்பு மாவட்டம் – ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.

அதாவது , அம்பாரை மாவட்டத்தில் இருந்து செல்வோர் , ஓட்டமாவடி நகரை தாண்டி – பொலநறுவைக்கு செல்லும் வீதியால் திரும்பினால் சுமார் 5 KM தூரத்துக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ளது.

அந்த இடத்துக்கு சென்றவுடன் – ஜனாஸா வாகனம் மட்டும் நல்லடக்கம் செய்யும் பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படும். குடும்ப உறுப்பினர் – சுகாதார ஆடை அணியாதவிடத்து அவருக்கு அனுமதி மறுக்கப்படும்.

ஜனாஸா வாகனம் உள் நுழையும் போது – அங்கு கடமையில் இருக்கும் பாதுகாப்பு தரப்பினர் ஜனாஸா மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை மீண்டும் பதிவு செய்து கொள்வர்.
நல்லடக்க பகுதிக்கு சென்ற வாகனத்திலிருந்து – அங்கு நல்லடக்க கடமைக்காக நியமிக்கப்பட்டோர் ஜனாஸா பெட்டியை பொறுப்பேற்பர். அதனைத் தொடர்ந்து – வாகனத்தின் உட்பகுதி , சுகாதார தரப்பினரால் தொற்று நீக்கம் செய்யப்படும்.

இந்த வேளை – வாகன சாரதி , எக்காரணம் கொண்டும் வாகனத்திலிருந்து கீழிறங்க முடியாது.
இதன்பின்னர் , அந்த ஜனாஸாவுடன் – ஏனைய பகுதிகளில் இருந்து வரும் ஜனாஸாக்கள் , ஏனைய மத நபர்களின் உடல் பெட்டிகள் ஓரிடத்தில் ஒன்று சேர்க்கப்படும்.
அங்கு – அந்தந்த மதப் பிரகாரம் பிரார்த்தனைகள் இடம்பெறும்.

முஸ்லிம் ஜனாஸாக்களின் உறவினர்கள் – ஜனாஸா தொழுகையில் ஈடுபடுவார்கள்.
இந்த மத அனுஷ்டானங்கள் சகல இன மரணித்த உடல்களுக்கும் பொதுவாகவே இடம்பெறும்.
இதனை தொடர்ந்து – நால்வர் இணைந்து கயிற்றினால் – குறித்த மரணித்த உடல் பெட்டிகளை குழிக்குள் இறக்குவார்கள். பெக்கோ இயந்திரம் மூலம் குழி மண்ணிட்டு மூடப்படும்.
நல்லடக்கம் செய்யப்பட்ட – ஒவ்வொரு உடல்களுக்கும் , அடையாளப்படுத்தும் வகையில் – அடக்கம் செய்யப்பட்ட வரிசைக்கு ஏற்ப இலக்கங்கள் வழங்கப்படும்.

இந்த இலக்கத்தை – குடும்ப உறுப்பினர்கள் – ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் சமர்ப்பித்து , அடக்கம் செய்யப்பட்டதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்..இவை – பிரதேச செயலகத்தில் ஆவணப்படுத்தப்படும் எனக் கூறப்படுகின்றது.

கொரோனா தொற்றால் மரணித்த அனைவருக்கும் மேலான சுவர்க்கம் கிட்டட்டும்..

ஆமீன்…

✍️ : Boomudeen Malik

நன்றி : ✍️ : Boomudeen Malik