சார் ‘FAIL’
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் தற்போதைய அரசாங்கம் ‘FAIL’ என்பதை மக்களும் ஏற்றுக்கொண்டுவிட்டனர். மாகாணசபைத் தேர்தலொன்று நடைபெற்றால் அரசாங்கத்துக்கு தக்க பதிலடி காத்திருக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“.. சீனா, இந்தியா மற்றும் அமெரிக்காவின் அழுத்தங்களால் நாட்டுக்கு எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகள் வரக்கூடும். முறையற்ற அரச முகாமைத்துவம் காரணமாகவே இந்நிலைமை ஏற்படும்.
நாட்டின் நிர்வாகம் இன்று ஸ்தம்பிதமடைந்துள்ளது. இந்நிலைமையை நான் அன்றே சுட்டிக்காட்டினேன்.
பிரதேச சபையில்கூட அங்கம் வகிக்காத ஒருவரின் நாட்டை ஒப்படைக்க வேண்டாம் என வலியுறுத்தியே கட்சியில் இருந்து வெளியேறினேன்.
மாகாணசபைத் தேர்தல் தற்போது அவசியமில்லை. அரசாங்கம் அதனை நடத்தினால் தேர்தலில் போட்டியிட வேண்டிய நிலை எதிர்க்கட்சிகளுக்கு ஏற்படும். அவ்வாறு நடத்தினால் அரசாங்கத்துக்கு வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலைதான் ஏற்படும்.
பொருட்களின் விலை உயர்வு உட்பட எல்லா துறைகளிலும் பிரச்சினை. இந்த அரசாங்கத்தால் முடியாது என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆக அரசாங்கம் ‘பெயில்’ என்பது உறுதியாகியுள்ளது என தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை எமது நாட்டுக்கு தேவையில்லை..” எனத் தெரிவித்திருந்தார்.