மாடறுப்பு தடை : சட்ட திருத்தத்திற்கு அனுமதி

மாடறுப்பு தடை : சட்ட திருத்தத்திற்கு அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பசு வதையை தடை செய்வது தொடர்பான 5 சட்டங்கள் மற்றும் கட்டளைச் சட்டங்களை திருத்துவது தொடர்பாகத் தயாரிக்கப்பட்ட சட்டமூலம் அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு இணங்கவில்லையென சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

அதற்கமைய, அது தொடர்பான திருத்தச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் அதனை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக இன்று (19) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

உள்நாட்டு விவசாயத்துறை மற்றும் பால்மா உற்பத்தி என்பவற்றை அதிகரிக்கும் நோக்கில் பசுவதையை தடை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்த அதேவேளை, அது தொடர்பான சட்டம், ஒழுங்குவிதி மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களால் நிறைவேற்றப்பட்ட துணைச் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள செப்டம்பர் 28 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.