விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது (Update)

விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது (Update)

இன்றுகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 

இன்று காலை விமல் வீரவன்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்து கொண்ட பின்னர் அவரை கைது செய்து நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் ​பேச்சாளர்ருவன் குணசேகர தெரிவித்தார்.

 

(2ம் இணைப்பு)

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச சற்று முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

கடவுச்சீட்டு தொடர்பான பிரச்சினை காரணமாக இன்று அதிகாலை தொடக்கம் விமல் வீரவன்ச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இது குறித்து தினேஸ் குணவர்த்தன பிரதமரின் கவனத்துக்குக் கொண்டுவந்ததையடுத்து, அவருக்கு தன் பயணத்தைத் தொடர அனுமதிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குடிவரவுத் திணைகக்ள அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்திருந்தார்.

எனினும் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் விமல் வீரவன்சவை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.

காணாமல் போனதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்ட கடவுச்சீட்டைப் பயன்படுத்தி அவர் வெளிநாடு செல்ல முயன்றதே இதற்கான காரணமாகும்.

ஒரு கடவுச்சீட்டு காணாமல் போன நிலையில் புதிய கடவுச்சீட்டு பெற்றுக் கொண்ட பின்னர், காணாமல்போன கடவுச்சீட்டு மீண்டும் கிடைத்தாலும் அதனை குடிவரவுத்திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

மற்றபடி அதனை பயன்படுத்துவது கடும் குற்றமாகும். இதனையே விமல் வீரவங்ச மேற்கொண்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தற்போது விமல் வீரவன்சவின் வாக்குமூலத்தைப் பதிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலும் அவர் இன்று மாலைக்குள் விடுவிக்கப்படலாம் அல்லது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம் என்றும் தெரிய வருகின்றது.