சூடான் இராணுவம் நாட்டைக் கைப்பற்றியது ஏற்புடையது அல்ல

சூடான் இராணுவம் நாட்டைக் கைப்பற்றியது ஏற்புடையது அல்ல

(ஃபாஸ்ட் நியூஸ் |  சூடான்) – சூடான் நாட்டின் இடைக்கால பிரதமர் அப்தல்லா ஹாம்டாக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு அவசர நிலையை அறிவித்துள்ளார் இராணுவத் தளபதி அப்தெல் பதாத் அல் புர்ஹான்.

ஆப்பிரிக்க கண்டத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது சூடான். பரப்பளவு அடிப்படையில் ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே இது மிகப்பெரிய நாடு. வடக்கில் எகிப்தும், கிழக்கில் எரித்திரியாவும் அமைந்திருக்கும் சூடானில் பெரும்பாலான மக்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகின்றனர்.

சூடான் நாட்டில் தற்போது வரை இடைக்கால அரசு ஆட்சியில் உள்ளது.

இந்த அரசின் பிரதமராக இருக்கிறார் அப்தல்லா ஹாம்டாக். முன்னதாக நீண்ட காலமாகவே ஒமர் அல் பஷீர் சூடான் நாட்டின் அதிபராக இருந்தார். 1989 முதல் 2019 வரை அவர் அதிபராக இருந்தார். அவர் ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தி கொள்ள ராணுவத் துணையுடன் மக்கள் அதிபரை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் அமைந்த இடைக்கால அரசின் பிரதமரானார் அப்தல்லா ஹாம்டாக்.

இந்நிலையில், அண்மைக்காலமாகவே இடைக்கால ஆட்சிக்கு எதிராக ராணுவத்தில் ஒரு பிரிவினர் செயல்படத் தொடங்கினர். இவர்கள் அவ்வப்போது ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அப்படியான முயற்சி நடைபெற அதனை சூடான் அரசு துரிதமாக செயல்பட்டு தடுத்தது.

ஆனால், தொடர்ச்சியாக இம்மாதத்தில் இன்று அதிகாலை, அப்தல்லா ஹாம்டாக்கை ராணுவத்தின வீட்டுச் சிறையில் வைத்தனர். இப்போது அவர் ர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாட்டில் பதற்றமான சூழல் நிலவுவதால் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினார் அந்நாட்டு ராணுவத் தளபதி.

இந்நிலையில், சூடான் அரசை ராணுவம் கைப்பற்றியுள்ளதற்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்கா தனது கவலையைத் தெரிவித்துள்ளது. சூடான் ராணுவம் நாட்டைக் கைப்பற்றியது ஏற்புடையது அல்ல. ராணுவம் இந்த முடிவைக் கைவிட்டு, இடைக்கால அரசுக்கு ஒத்துழைத்து நாடு அமைதி வழியில் செல்ல உதவ வேண்டும் என்று கூறியுள்ளது.

சீனாவோ ராணுவத்தின் இருபிரிவுகளும் அமர்ந்து பேசி சுமுகத் தீர்வை எட்ட வேண்டும் என்று கூறியுள்ளது. ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஹெய்கோ மாஸ், சூடானில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்து அந்நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்பானவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில் ஐ.நா., சபையும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. பிரதமர், அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகளை ராணுவம் கைது செய்துவைத்துள்ள செயல் ஏற்புடையதல்ல. கைதானவர்களை உடனடியாக விடுவிப்பதோடு, அமைதிப் பேச்சுவார்த்தையையும் தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளது.