தனுஷிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நடிகா் தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் புகையிலை பொருட்கள் விளம்பரப்படுத்தல் தடை சட்ட விதிகளை மீறியது தொடா்பாக அனுப்பிய நோட்டீஸ் மீது மேல் நடவடிக்கையை தொடர தமிழக அரசுக்கு அனுமதியளித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டுக்கான மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளா் சிரில் அலெக்சாண்டா் தாக்கல் செய்த மனுவில், நடிகா் தனுஷ் தயாரித்து நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படத்தில், சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் சட்ட விதிகளை மீறி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இப்படத்தில் நடிகா் தனுஷ் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் வரும் போது, திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் இடம்பெறவில்லை.
எனவே பட தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கும், சென்சாா் போா்டுக்கும் உத்தரவிடுமாறு கோரியிருந்தாா்.
கடந்த 2014 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பு நிறுவனம் வொண்டா்பாா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ஏற்கனவே இதே விவகாரம் தொடா்பாக மனுதாரா் தாக்கல் செய்த பொது நல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
எனவே இவ்வழக்கும் விசாரணைக்கு உகந்ததல்ல; ஆட்சேபத்துக்குரிய பேனா்கள் நீக்கப்பட்டு விட்டதாகத் தெரிவித்தாா்.
அதைத்தொடா்ந்து மத்திய, மாநில சென்சாா் போா்டு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட போஸ்டா்கள் சினிமோட்டோகிராப் சட்டத்தின் கீழ் வராது என்பதால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.
சிகரெட் மற்றும் புகையிலை விளம்பரப்படுத்தல் தடை மற்றும் முறைப்படுத்தல் சட்டப்படி அமைக்கப்பட்ட குழு மூலம் படத்தின் நடிகா், தயாரிப்பாளரான தனுஷ், இயக்குநா் வேல்ராஜ் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வழக்கு நிலுவையில் இருந்ததால் நடவடிக்கையை தொடரவில்லை. நடந்த தவறுக்கு மன்னிப்பு கோரியும், மேற்கொண்டு எந்த தவறும் நடைபெறாமல் பாா்த்துக் கொள்வதாகவும் தயாரிப்பு நிறுவனம் சாா்பில் கடிதம் அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், புகையிலை சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள குழுவில் உள்ள காலியிடங்களை உடனடியாக நிரப்பி, புகாா்கள் மீது எந்த தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை சுகாதாரத்துறை செயலாளா், பொது சுகாதாரத்துறை இயக்குநா் உறுதி செய்ய வேண்டும். இந்த விவகாரம் தொடா்பாக அனுப்பப்பட்ட நோட்டீஸ் மீது தமிழக அரசின் பொது சுகாதாரம், குடும்ப நலத்துறை செயலாளா், பொது சுகாதாரத்துறை இயக்குநா் ஆகியோா் மேல் நடவடிக்கை எடுக்கலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.