தேர்தல் களத்தில் மஹிந்த தரப்பு தனிக்கூட்டணியில்

தேர்தல் களத்தில் மஹிந்த தரப்பு தனிக்கூட்டணியில்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் மார்ச்சில் நடத்துவதற்கு அரசு உத்தேசித்துள்ள நிலையில், அதை எதிர்கொள்வதற்குரிய தயார்ப்படுத்தல் நடவடிக்கைகளில் பிரதான அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

பலமான வேட்பாளர் அணியை தெரிவு செய்தல், பிரசாரப் பொறிமுறை, கூட்டணி அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் தற்போதிலிருந்தே ஆரம்பமாகியுள்ளன.

இதன்படி தமது கட்சியின் உள்ளூராட்சி செயற்பாட்டாளர்களை ஐக்கிய தேசியக் கட்சி சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளது. அடுத்த வாரத்தினுள் இதற்கான சந்திப்பு கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெறும் என அறியமுடிகின்றது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் விவகாரத்தைக் கையாள்வதற்காக அக்கட்சி தனிக்குழுவொன்றையும் அமைக்கவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தேர்தலுக்குரிய பூர்வாங்கப் பணிகளை ஆரம்பித்துள்ளன.

இதற்குரிய பொறுப்புகள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தின்போதும் தேர்தல் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ள மஹிந்த ஆதரவு அணியினர், தனிக் கூட்டணியொன்றை அமைத்து தேர்தலில் களமிறங்குவதற்கான பேச்சுகளை ஆரம்பித்துள்ளன.

இதன் முதற்கட்ட சந்திப்பு முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது எனத் தெரியவருகின்றது. அத்துடன், ஜே.வி.பியும் தேர்தல் தொடர்பில் தனது முழுப்பார்வையையும் செலுத்தியுள்ளது.

தமிழ் முற்போக்குக் கூட்டணியும் தேர்தல் சம்பந்தமான ஆரம்பகட்ட நடிவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து களமிறங்குவதா அல்லது தனித்துக் களமிறங்குவதா அல்லது ஒரு சில பகுதிகளில் தனித்தும் ஏனைய பகுதிகளில் கூட்டணியாக களமிறங்குவதா என்பது பற்றி அது ஆலோசனை நடத்தி வருகின்றன.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் இதே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றது. கட்சியின் செயற்பாட்டாளர்களுடன் அண்மையில் சந்திப்பு நடத்தப்பட்டது.

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் மீது தமது பார்வையை செலுத்தியுள்ளன.

இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தல் கலப்பு முறையிலேயே இடம்பெறும். எல்லை நிர்ணத்திலுள்ள குறைப்பாடுகள் விரைவில் நிவர்த்தி செய்யப்படவுள்ளன. இதற்கான அமைச்சரவை உப குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, உள்ளூராட்சி சபைத்தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு , ஜனாதிபதியின் புகைப்படங்களை பயன்படுத்தி பிரசாரம் செய்வதற்கு இடமளிக்கப்படக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதியிடம் மேற்படி கோரிக்கை விடுத்துள்ளார் மஹிந்த ஆதரவு அணி உறுப்பினரான ரஞ்சித் டி சொய்சா.

நாடாளுமன்றத் தேர்தலின்போதும், தங்களின் படங்களைப் பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியினர் பிரசாரம் செய்தனர். இதனால் எமக்குப் பாதிப்பு ஏற்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, எனது படங்களை நீங்கள் பயன்படுத்த தயங்கியபோது ஐக்கிய தேசியக் கட்சியினர் பயன்படுத்தினர். இதில் யார் பக்கம் தவறிருக்கிறது எனக் கேட்டுள்ளார்.