குற்றச்சாட்டுக்களை மறுக்கும் லிற்றோ எரிவாயு நிறுவனம்

குற்றச்சாட்டுக்களை மறுக்கும் லிற்றோ எரிவாயு நிறுவனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தரம் குறைந்த எரிவாயு கொள்கலன்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என லிற்றோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

திரவ பெற்றோலிய வாயு உள்ளடக்கத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் எரிவாயு தொடர்பில் சர்வதேச சுயாதீன ஆய்வுகூட அறிக்கை பெற்றுக் கொள்ளப்படுவதுடன், உள்நாட்டிலும் ஆய்வுகூட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது என தெரிவித்துள்ளது.

அண்மையில் குதிரை பந்தய திடலில் ஹோட்டல் ஒன்றில் எரிவாயு கசிவு ஏற்பட்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் குறித்த ஹோட்டலுக்கு தமது நிறுவனம் எரிவாயு விநியோகம் செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளது.

எரிவாயு கொள்கலன் விபத்துக்களில் அநேகமானவை எரிவாயு ஹோஸ் (குழாய்) மற்றும் எரிவாயு அடுப்பு என்பனவற்றின் குறைபாடுகளினால் நிகழ்ந்துள்ளதாகவும், எரிவாயுவின் தரம் குறைவினால் விபத்துக்கள் இடம்பெற்றதில்லை எனவும் தெரிவித்துள்ளது.

எரிவாயு கொள்கலன் ஒன்றினால் அதில் அடைக்கப்படும் எரிவாயுவின் அளவிலும் ஆறு மடங்கு அழுத்தத்தை தாங்கிக் கொள்ளக்கூடிய இயலுமை உண்டு என தெரிவித்துள்ளது.

எனவே சந்தையில் விநியோகிக்கப்படும் எரிவாயு கொள்கலன்களினால் ஆபத்து ஏற்படும் என தகவல் உண்மைக்குப் புறம்பானது என லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கையில் விற்பனை செய்யப்படும் எரிவாயு சிலிண்டர்களில் உள்ளடக்கப்படும் எரிவாயு தரமற்றது என நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் முன்னாள் பிரதி நிறைவேற்று அதிகாரி துசான் அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.