ஒலிம்பிக்கில் இம்முறை அகதிகளுக்கும் வாய்ப்பு

ஒலிம்பிக்கில் இம்முறை அகதிகளுக்கும் வாய்ப்பு

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றிலேயே முதல் முறையாக, பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற உள்ள 2016 ஒலிம்பிக் போட்டியில் அகதிகளுக்கும் வாய்ப்பளிக்கப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) அறிவித்துள்ளது.

இதுகுறித்து, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச் கூறுகையில், “இது, உலகளவில் உள்ள அகதிகளுக்கு ஒரு நம்பிக்கைச் சின்னமாக இருக்கும். எந்த ஒரு நாட்டையோ, தேசிய ஒலிம்பிக் கமிட்டியையோ சார்ந்து இல்லாத காரணத்தால், தகுதியுடைய அகதிகளும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாமல் போகிறது. எனவே, அடுத்த ஆண்டு ரியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் அகதிகளை அனுமதிப்பதென சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்துள்ளது. அணிவகுப்பின்போது தங்களுக்கென தேசியக் கொடி, தேசிய கீதம் இல்லாத அகதிகள், ஒலிம்பிக் தேசியக் கொடியின் கீழ் பங்கேற்பார்கள். ஒலிம்பிக் கீதத்துடன் அவர்கள் வரவேற்கப்படுவார்கள்.” என்றார்.

மேலும், விளையாட்டில் ஆர்வமுள்ள அகதிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் 2 மில்லியன் டாலர் (ரூ.13 கோடி) நிதியை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒதுக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தங்களுக்கென்று சொந்த நாடில்லாமல் அவதிப்படும், விளையாட்டுத் துறையில் சாதிக்க நினைக்கும் அகதிகளை இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.