விசாரணைக்கு 20 தான் வருவேன் – நிஷாந்த

விசாரணைக்கு 20 தான் வருவேன் – நிஷாந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மைத்துனனான நிஷாந்த விக்கிரமசிங்கவை வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (30) வெள்ளிக்கிழமை அழைக்கப்பட்டிருந்த நிலையில், தான் எதிர்வரும் 20ஆம் திகதிதான் வருவேன் என்று அறிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.

அவர், வெளிநாடொன்றில் இருப்பதாக ஆணைக்குழுவின் முன்னிலையில் அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா விமான சேவையில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக சமூகமளிக்குமாறே அந்த விமான சேவையின் முன்னாள் தலைவரான நிஷாந்த விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதற்கான நோட்டீஸை கையளிப்பதற்காக ஆணைக்குழுவின் அதிகாரிகள், அவரது வீட்டுக்கு சென்றிருந்த போது,

அவர், கடந்த மூன்று வருடங்களாக வீட்டுக்கு வருவதில்லை என்றும், அவருக்கான நோட்டீஸை தன்னால் பொறுப்பேற்க முடியாது என்றும் அவரது மனைவி, ஆணைக்குழுவின் அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.

தனக்கும், எனது கணவருக்கும் இடையில் தொடர்பே இல்லை என்றும்  அவர் வசிக்கும் வீட்டின் விலாசம் தெரியாது என்றும் அவரது மனைவி தெரிவித்ததாக அறியமுடிகின்றது.