இலங்கையில் தமிழர்களின் உரிமைகளைப் பெற போராட்டங்கள் தொடர வென்றும் – எரிக் சொல்கைம்

இலங்கையில் தமிழர்களின் உரிமைகளைப் பெற போராட்டங்கள் தொடர வென்றும் – எரிக் சொல்கைம்

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் தமிழ் மக்களின் உரிமைகளை சிங்களவர் தங்கத் தட்டில்வைத்து கையளிக்கப்போவதில்லை என்று எரிக் சொல்கைம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உள்நாட்டுப் போரில் நோர்வேயின் வகிபாகம் குறித்து ”சிவில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருதல்’ (To end a civil war)எனும் தலைப்பில் மார்க் சோல்டர் எழுதிய புத்தக வெளியீட்டுவிழா லண்டனில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய நோர்வேயின் முன்னாள் சமாதானத்தூதுவரும், அமைச்சருமான எரிக் சொல்கைம், இலங்கையில் தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதாயின் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் தெற்கில் சிங்கள மக்களின் கூடுதலான வாக்குகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே கிடைத்திருந்தது. தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படுவதை எதிர்க்கும் சமிக்ஞையாகவே அதனை நோக்க வேண்டும்.

ஈழப் போரின் இறுதிக்கட்ட யுத்தத்தில் விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக சரணடைந்து காப்பாற்ற எடுத்த முயற்சியை பிரபாகரன் தடுத்துவிட்டார். இல்லாவிட்டால் அவ்வாறு சரணடைகின்றவர்களைக் காப்பாற்ற கப்பல் ஒன்றும் தயார்படுத்தப்பட்டிருந்தது.

மறுபுறத்தில் சரணடைதல் தொடர்பான பிரேரணையைக் கொண்டு வந்த அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஆணைக்குழு, நோர்வே, இந்தியா போன்றன விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஆகியோரை பொறுப்பெடுக்க விரும்பவில்லை. இவ்வாறான சிக்கல்கள் காரணமாகவே வெள்ளைக்கொடி ஏந்திய நிலையிலும் படுகொலைகள் இடம்பெற வழியேற்பட்டது.

சர்வதேசத்தின் பலம் வாய்ந்த நாடுகள் மூலம் முன்வைக்கப்பட்ட சரணடைதல் தொடர்பான யோசனையை விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொண்டிருந்தால் அதனை அரசாஙகத்தினால் நிராகரிக்க முடியாது போயிருக்கும்.

ஆயுதப் போராட்டத்தின் மூலமாக பெறமுடியாத உரிமைகளை, அப்போராட்டம் நசுக்கப்பட்ட தற்போதைய நிலையில் தாயகத்திலும் , புலம்பெயர் தேசங்களிலும் தொடர்ச்சியான போராட்டங்கள் மூலமாக மட்டுமே தமிழரின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்றும் எரிக் சொல்கைம் மேலும் தெரிவித்துள்ளார்.