இலங்கை அணிக்கெதிராக பிராத்வைடின் அதிரடி ஆட்டம்

இலங்கை அணிக்கெதிராக பிராத்வைடின் அதிரடி ஆட்டம்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என கைப்பற்றியது. இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஞாயிற்றுக்கிழமை தொடங்க இருக்கிறது.

இதற்கு முன்னோட்டமாக  பயிற்சி ஆட்டத்தில் இலங்கை பிரசிடென்ட்ஸ் லெவன் அணியுடன் மோதியது.

நாணயச் சுழட்சியில் வென்ற இலங்கை பிரசிடென்ட்ஸ் லெவன் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை அணியின் சிறப்பான பந்து வீச்சால் அந்த அணி 30 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்து தத்தளித்திருந்தது.

8-வது விக்கெட்டுக்கு ரசலுடன் பிராத்வைட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இலங்கை பந்து வீச்சை துவம்சம் செய்தது. ரசல் 54 பந்தில் தலா 6 பவுண்டரிகள், சிக்சருடன் 89 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

பிராத்வைட் 58 பந்தில் 10 பவுண்டரிகள், 7 சிக்சருடன் 113 ரன்கள் குவித்தார். இவர்கள் இருவரது சிறப்பான ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் 48.4 ஓவரில் 318 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

பின்னர் 319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை பிரசிடென்ட்ஸ் லெவன் அணி களம் இறங்கியது. ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டதால் இலங்கை அணிக்கு டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 21 ஓவரில் 147 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் இலங்கை அணியால் 21 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.