2வது தாரத்தையும் 10 மாதத்தில் விவாகரத்துச் செய்த இம்ரான் கான்

2வது தாரத்தையும் 10 மாதத்தில் விவாகரத்துச் செய்த இம்ரான் கான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு உலகக்கோப்பையை வாங்கிக் கொடுத்தவர் முன்னாள் ஆல் ரவுண்டர் இம்ரான் கான். இவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகிய பின் தெரிக்-இ-இன்சாப் என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார்.

இம்ரான்கான் பிரிட்டனைச் சேர்ந்த ஜெமிமா கான் என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். எனினும், தொலைக்காட்சித் தொகுப்பாளினியான ரேஹம் கானுடன் இம்ரான் பழகி வருவதாகச் செய்திகள் வெளியாகின.

தன்னைச் சுற்றி வந்த கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரேஹம் கானை கடந்த ஜனவரி மாதம் எளிய முறையில் திருமணம் செய்துகொண்டார் இம்ரான் கான். ரேஹம் கானுக்கும் ஏற்கெனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன. அவர் தனது முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டார்.

10 மாதங்கள் மகழ்ச்சியாக சென்ற இவர்களது வாழ்க்கையில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இந்த தகவலை தெரிக்-இ-இன்சாப் கட்சியின் செய்தி தொடர்பாளர் நயீம் உல் ஹக்யூ இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘பிடிஐ கட்சியின் தலைவர் இம்ரான் கான் மற்றும் ரேஹம் கான் ஆகியோர் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

மிகவும் உணர்வுப்பூர்வமான மற்றும் தீவிரமான இந்த விவகாரம் குறித்து ஊடகங்கள் ஊகச் செய்திகளை கைவிட வேண்டும். மேலும், இதுகுறித்து பேசுவதற்கு ஒன்றுமில்லை’’ என்று தெரிவித்துள்ளது.