நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கை வருகிறது அவுஸ்திரேலிய அணி

நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கை வருகிறது அவுஸ்திரேலிய அணி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இலங்கைக்கு எதிராக மூவகை சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் பங்குபற்றுவதற்காக அவுஸ்திரேலியா கிரிக்கெட் குழாம் ஜூன் 1ஆம் திகதி புதன்கிழமை இலங்கை வருகிறது.

கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசுக்கு எதிரான அமைதி ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் குழாம் இலங்கை வருகின்றமை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும்.

3 போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர், 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் இலங்கையை அவுஸ்திரேலியா எதிர்த்தாடவுள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலைமையை நன்கு அறிந்தவர்களாக அவுஸ்திரேலிய வீரர்கள் துணிச்சலுடனும் அர்ப்பணிப்புத்தன்மையுடனும்   இங்கு வருகை தரவுள்ளனர்.

இலங்கை நிலைமை குறித்து பல தடவைகள் கலந்துரையாடல்களை நடத்தியதாகவும் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை நம்பிக்கை தருவதாகவும் அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் விக்கெட் காப்பாளர் அலெக்ஸ் கேரி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலை, எரிபொருள் மற்றும் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு, சுழற்சி முறையில் மின்வெட்டு ஆகியவற்றுக்கு மத்தியில் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடர், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆகியவற்றை சூரிய வெளிச்சத்தில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய சூழ்நிலையில் இலங்கைக்கு கிரிக்கெட் விஜயம் செய்வது குறித்து வீரர்கள் அசௌகரியத்தை உணர்ந்தார்கள் என்பதை  அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொட் க்றீன்பேர்க் அண்மையில் ஓப்புக்கொண்டிருந்தார்.

எனினும், இலங்கைக்கு விஜயம் செய்வது குறித்து கவலைப்படவில்லை என ஆறு வார காலம் இங்கு தங்கியிருந்து விளையாடவுள்ள அலெக்ஸ் கேரி தெரிவித்தார்.

கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டுள்ள உள்ளூர் மக்கள் மத்தியில் சர்வதேச கிரிக்கெட் சிறிய அளவிலேனும் மனநிறைவை ஏற்படுத்தும் என குறிப்பிட்ட கேரி, இலங்கை சென்றடைந்ததும் நிலைமைகளை நேரில் அவதானிக்கக்கூடியதாக இருக்கும் என்றார்.

‘இந்த சுற்றுப் பயணம் குறித்து கவலை இருப்பதாக நான் உணரவில்லை. கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியா எங்களை நன்றாக கவனிக்கிறது. பாதுகாப்பு, தரப்படும் தகவல்கள் அனைத்தும் திருப்திகரமாக இருக்கிறது. எனவே இலங்கைக்கான கிரிக்கெட் விஜயம் விறுவிறுப்பாக அமையும் எனவும் இலங்கையர் முகங்களில் புன்னகை மலரும் எனவும் நம்புகின்றேன்.

‘கிடைக்கப்பெறும் தகவல்கள் பிரகாரம் இலங்கை மக்கள் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளனர். ஆனால், கிரிக்கெட் அவர்களுக்கு சற்று ஆசுவாசத்தைக் கொடுக்கும் என நம்புகின்றேன்’  என்று கேரி கூறினார்.

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடர் ஜூன் 7, 9, 11ஆம் திகதிகளில் நடைபெறும். முதல் இரண்டு போட்டிகள் கொழும்பிலும் கடைசிப் போட்டி கண்டியிலும் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரும் அதன் பின்னர் டெஸ்ட் தொடரும் நடைபெறும்..