உரம் கிடைக்காவிடின் உணவு உற்பத்தியை முன்னெடுப்பதில் தடை ஏற்படும் – பிரதமர்

உரம் கிடைக்காவிடின் உணவு உற்பத்தியை முன்னெடுப்பதில் தடை ஏற்படும் – பிரதமர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆண்டிறுதியில் உரம் கிடைக்கப்பெறாவிட்டால் உணவு உற்பத்தியை முன்னெடுப்பதில் தடை ஏற்படும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க டொலர் மற்றும் இலங்கை ரூபா பற்றாக்குறை காரணமாக இலங்கையின் முழு அரசியல் முறைமைகள் பாதிப்படைந்துள்ளன.

இந்த பற்றாக்குறைகள் காரணமாக சாதாரண மக்கள் மற்றுமல்லாது நாடாளுமன்றம் உட்பட அரசாங்கம் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது.

இந்தநிலையில் எதிர்வரும் காலங்களில் பாரிய உணவுப்பற்றாக்குறையினை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும்.

யுக்ரைன் – ரஷ்ய போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பாரிய உணவு விநியோகப் பிரச்சினைகள் ஏற்படவுள்ளன.

உலகிலேயே அதிக தானிய வகைகளை உற்பத்தி செய்யும் நாடுகளான ரஷ்யாவும் யுக்ரைனும் தமது உற்பத்தியினை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்படும்.

குறிப்பாக ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படும் கோதுமை மா உட்பட தானிய வகைகளை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்படுவதுடன் யுக்ரைனின் உற்பத்திகள் அந்த நாட்டு துறைமுகங்களில் இருந்து ஏற்றுமதி செய்ய முடியாத சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

போர் இன்று நிறைவடைந்தாலும் வழமையான நிலைக்கு திரும்புவதற்கு மேலும் சில வருடங்கள் எடுக்கும்.

இதுதவிர சில மேற்கத்திய நாடுகளிலும் உர பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

நாட்டில் தற்போதைய உர பற்றாக்குறை காரணமாக எதிர்வரும் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதம் வரையிலேயே உணவு உற்பத்தியை மேற்கொள்ள முடியும்.

பின்னர் அடுத்த பெப்ரவரி மாதமே மீண்டும் உற்பத்திகள் இடம்பெறும்.

இதற்கிடைப்பட்ட காலப்பகுதியில் உணவுக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும்.

எவ்வாறாயினும் எமது பிரச்சினையுடன் யுக்ரைன் பிரச்சினைகளை தொடர்புபடுத்தக்கூடாது.

எப்படியிருப்பினும் இலங்கையின் பிரச்சினை யுக்ரைன் பிரச்சினையினால் மேலும் பல மடங்காக அதிகரித்துள்ளது.

டொலர் பற்றாக்குறை காரணமாக உணவுப்பற்றாக்குறை ஏற்படும் சாத்தியக்கூறு உள்ளது.

நாங்கள் தொடர்ச்சியாக டொலர்களை பெறுவதில் பின்னிற்கிறோம்.

எமது நாடு செயற்படுவதற்கு சில ட்ரில்லியன் டொலர்கள் தற்போது அவசியமாகவுள்ளது.

எமது நட்பு நாடுகளுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறோம்.

டொலர் பற்றாக்குறை காரணமாக அரசியல் ஸ்திரத்தன்மை சீரழிந்துள்ளது.

இது ஆரம்பமே.

இதன் காரணமாக ஏராளமானோர் தமது வாழ்வாதாரத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.

பல நிறுவனங்கள் செயற்பட முடியாமல் போகும் தன்மையை கொள்ளும்.

தற்போது பெற்றோலுக்கான வரிசை இல்லாமல் போயுள்ளது.

நாளாந்தம் எரிபொருளுக்காக 20 மில்லியன் முதல் 40 மில்லியன் டொலர் தேவைப்படுகிறது.

ஒரு நாளாவது குறித்த நிதியை வழங்க தவறும் பட்சத்தில் கப்பலில் இருந்து பெற்றோலை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படும்.

பல அரச நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றன.

பல திட்டங்களினால் பலன் இல்லாமல் போயுள்ளது.

வெளிநாட்டு கடன் முறைமையை பெறுவதில் உகந்த முன்னுரிமை வழங்கப்படுவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.