மிருகக்காட்சிசாலை விலங்குகளுக்கு உணவளிப்பதில் நெருக்கடி

மிருகக்காட்சிசாலை விலங்குகளுக்கு உணவளிப்பதில் நெருக்கடி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உணவுப் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில், அதிகளவான விலங்குகளை கொடூரமான விலங்குகள் நடமாடாத சரணாலயங்களில் விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய விலங்கியல் பூங்காவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திலக் பிரேமகாந்த அறிவித்துள்ளார்.

மிருகக்காட்சிசாலையில் ஒரு இனத்தைச் சேர்ந்த நான்கு விலங்குகளை மாத்திரம் மக்கள் பார்வைக்கு வைத்தல் போதுமானது. வனவிலங்கு திணைக்களத்தின் அனுமதியுடன் அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பகுதிகளுக்கு மான் போன்ற விலங்குகள் விடுவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடியால் தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். டெண்டர் மூலம் விலங்குணவு வழங்கியவர்களுக்கு பணம் கொடுக்க மிருகக்காட்சிசாலையில் பணம் இல்லை. எனவே உணவு வழங்குபவர்கள் பணம் செலுத்தும் வரை உணவு வழங்குவதை தாமதப்படுத்துகின்றார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், உணவுப் பிரச்சினைக்குத் தீர்வாகவும், பணத்தை மிச்சப்படுத்தவும் நீண்ட காலமாக மிருகக்காட்சிசாலை மிருகங்களுக்கு வழங்கி வந்த விலையுயர்ந்த உணவு வகைகளுக்கு பதிலாக மாற்று உணவு வகைகளை வழங்கி வருகின்றோம். அதன்படி, ஆப்பிள், தோடம் போன்ற பழங்களை உண்ணும் விலங்குகளுக்கு கொய்யா போன்ற பழங்களும், விலை உயர்ந்த சூரியகாந்தி தானியங்களுக்கு பதிலாக பறவைகள் சாப்பிடும் சிறிய தானியங்களும் வழங்கப்பட்டு வருவதாகவும் தேசிய விலங்கியல் பூங்காவின் பணிப்பாளர் கூறியுள்ளார்.

அத்துடன், விலங்கியல் திணைக்களத்திற்கு சொந்தமான பண்ணைகளில் உணவு உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கோனாபொல பண்ணையில் அதிகளவான புற்கள் மற்றும் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளதுடன், ரிதியகம தோட்டத்தில் 20 ஏக்கர் பண்ணை அமைக்கப்பட உள்ளது. மிருகக்காட்சிசாலையின் வருவாயை அதிகரிக்க கொவிட் காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல்வேறு செயல்பாடுகளை மீண்டும் செயல்படுத்த தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கிருமிகள் உடலுக்குள் நுழைவதால் விலங்குகளுக்கு வெளி உணவுகள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளன. விலங்குகளுக்கு உணவளிக்க விரும்புபவர்களுக்கு உலர் உணவு, புலிக்குட்டிகளுக்கு பால் மா மற்றும் மிருகக்காட்சிசாலையில் உள்ள யானைகளுக்கு கரும்பு போன்ற பொருட்களை வழங்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.