துருக்கி பாராளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி அமோக வெற்றி

துருக்கி பாராளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி அமோக வெற்றி

துருக்கியில் அதிபர் ரீசெப் தய்யீப் எர்டோகன் தலைமையில் ஆட்சி நடக்கிறது. இவரது ஏ.கே.பி.கட்சி கடந்த 13 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் இவரது ஆட்சி மெஜாரிட்டியை இழந்தது. அதை தொடர்ந்து அவர் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

அதை தொடர்ந்து 550 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், அதிபர் எர்டோகனின் ஏ.கே.பி. கட்சி போட்டியிட்டது.

அக்கட்சியை எதிர்த்து பிரதான எதிர்க்கட்சியான சி.எச்.பி. மற்றும் எச்.டி.பி. எம்.எச்.பி. ஆகிய கட்சிகளும் மோதின. நேற்று ஓட்டு பதிவு நடந்தது. அதையொட்டி மாலையில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.

தொடக்கத்தில் இருந்தே அதிபர் எர்டோகனின் ஆளும் கட்சி முன்னிலை பெற்று வந்தது. அனைத்து ஓட்டுகளும் எண்ணப்பட்ட நிலையில் அதிபரின் ஏ.கே.பி. கட்சி தனிமெஜாரிட்டியுடன் அமோக வெற்றி பெற்றது.

இவரது கட்சிக்கு 49.4 சதவீதம் வாக்குகள் கிடைத்தன. அதன் மூலம் 316 இடங்களை அக்கட்சி பெற்று பாராளுமன்றத்தில் அசுர பலம் பெற்றுள்ளது.

தனி மெஜாரிட்டிக்கு 276 இடங்கள் கிடைத்தால் போதும். ஆனால் அக்கட்சி 316 இடங்களில் வெற்றி பெற்று பலமான ஆளும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த தேர்தலில் எந்தகட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத நிலையில் ஆளும் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இது அதிபர் எர்டோகனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம் அதிபருக்கு அதிகாரம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, நாட்டின் வளர்ச்சிக்கு எந்த ஒரு திட்டத்தையும் அறிவித்து தங்கு தடையின்றி செயல்படுத்த முடியும். அதற்காக மக்கள் வாக்களித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சியான சி.எச்.பி. கட்சி 25.4 சதவீத ஓட்டுகளே பெற்றுள்ளது. அக்கட்சிக்கு 134 இடங்கள் கிடைத்துள்ளன. எச்.டி.பி.கட்சி 59 இடங்களிலும், எம்.எச்.பி.கட்சி 41 இடங்களிலும் வென்றுள்ளன.