வைத்தியர் ஷாபி கோரிய நிவாரணங்கள் கிடைத்ததால் வழக்கை முடிவுக்கு கொண்டுவர நீதிமன்றம் தீர்மானம்!

வைத்தியர் ஷாபி கோரிய நிவாரணங்கள் கிடைத்ததால் வழக்கை முடிவுக்கு கொண்டுவர நீதிமன்றம் தீர்மானம்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சட்டவிரோதமாக கருத்தடை செய்ததாக பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்டு கட்டாய விடுமுறையில் அனுப்பட்ட வைத்தியர் ஷாபிக்கு, கட்டாய விடுமுறை காலத்தில் வழங்கப்பட வேண்டிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதிக்குள் முழுமையாக செலுத்தி முடிப்பதாக சுகாதார அமைச்சு மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு உறுதியளித்துள்ளது. சட்ட மா அதிபர் ஊடாக இதனை சுகாதார அமைச்சு நேற்று முன் தினம் (07)மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவித்து.

சட்டவிரோதமாக கருத் தடை செய்ததாக பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்டு கட்டாய விடுமுறையில் அனுப்பட்ட தனக்கு, வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவை மற்றும் கொடுப்பணவுகளை உடனடியாக வழங்க உத்தரவிடுமாறுகோரி குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த எழுத்தாணை ( ரிட்) மனு நேற்று முன்தினம் (7) மேன் முறையீட்டு நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்டது. மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இம்மனு பரிசீலிக்கப்பட்டது.

இதற்கு முன்னர் குறித்த மனு பரிசீலிக்கப்பட்டபோது அரச நிர்வாக அமைச்சின் நிறுவங்கள் தொடர்பிலான பணிப்பளர் நாயகத்தின் கடிதம் ஒன்றை மன்றில் முன்னிலைப்படுத்தி, சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் பிரசன்னமான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி சுமதி தர்மவர்தன, வைத்தியர் ஷாபி கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட காலப்பகுதியில், அவருக்கு செலுத்தப்படவேண்டிய அடிப்படை சம்பளம், கொடுப்பனவு, வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு, இடைக்கால கொடுப்பனவுகள் உள்ளிட்டவற்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாக நீதிமன்றுக்கு தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே, அம்மனு நேற்று முன்தினம் ( 7) பரிசீலனைக்கு வந்த போது, குறித்த அடிப்படை சம்பளம், கொடுப்பனவு, வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு, இடைக்கால கொடுப்பனவுகள் உள்ளிட்டவற்றை ஜூலை 10 ஆம் திகதிக்குள் முழுமையாக செலுத்துவதாக சுகாதார அமைச்சின் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.

வைத்தியர் ஷாபியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த எழுத்தாணை மனுவில், குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சந்தன கெந்தன்கமுவ, அவ்வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எம்.எஸ். வீரபண்டார, சுகதர அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சின் செயலர் மேஜர் ஜெனரல் வைத்தியர் எஸ்.எம். முணசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இம்மனு கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி முதன் முதலாக ஆராயப்பட்ட நிலையில் பிரதிவாதிகளுக்காக ஆஜராகும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன கோரிய கால அவகாசத்துக்கு அமைய, பின்னர் பெப்ரவரி 17 ஆம் திகதி பரிசீலிக்கப்பட்டிருந்தது.

இதன்போது போது, மனுதாரரான வைத்தியர் ஷாபி சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த சிரேஷ்ட சட்டத்தரணி புலஸ்தி ரூபசிங்க, தனது சேவை பெறுநருக்கு எதிராக முன்னெடுக்கபப்படும் அடிப்படை ஒழுக்காற்று விசாரணைகள், தற்போதைய குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சந்தன கெந்தன்கமுவ ஊடாக முன்னெடுக்கப்படுவது தொடர்பில் ஆட்சேபனைகளை முன்வைப்பதாக கூறினார். குறித்த பணிப்பாளர் பக்கச்சார்பான நபர் எனவும், அவர் தொடர்பில் அரச சேவை ஆணைக்குழுவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது சட்டத்தரணி புலஸ்தி ரூபசிங்க குறிப்பிட்டிருந்தார்.

எனினும் நேற்று முன்தினம் ( 7) பரிசீலனைகளின்போது, வைத்தியர் சந்தன கெந்தன் கமுவ முன்னிலையில் ஒழுக்காற்று விசாரணைகளை எதிர்கொள்ள வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு ஆட்சேபனை இல்லை என அவரது சட்டத்தரணிகள் மன்றுக்கு தெரிவித்தனர்.

அதற்கமைய, மனுவின் ஊடாக கோரப்பட்ட நிவாரணங்கள் கிடைத்துள்ளதன் பின்னனியில், இந்த ரிட் மனுவை மீளப் பெற்றுக்கொள்ள வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் தரப்பு கோரிய நிலையில், வழக்கை முடிவுக்கு கொண்டுவர நீதிமன்றம் தீர்மானித்தது.

சட்டத்தரணி சஞ்ஜீவ குல ஆரச்சியின் ஆலோசனைக்கு அமைய இம்மனுவில் மனுதாரர் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்காக சட்டத்தரணிகளான புலஸ்தி ரூபசிங்க, ஹபீல் பாரிஸ் ஆகியோருடன் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆஜராகினார்.

பிரதிவாதிகளுக்காக அரச சட்டவாதி மெதக பெர்ணான்டோவுடன் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன ஆஜராகினார்.