IPL ஏலம் – 44,075 கோடிக்கு விற்பனை!

IPL ஏலம் – 44,075 கோடிக்கு விற்பனை!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஐபிஎல் போட்டியின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான தொலைக்காட்சி மற்றும் எண்ம ஒளிபரப்பு உரிமம் மொத்தமாக ரூ.44,075 கோடிக்கு இணையவழி ஏலத்தில் திங்கட்கிழமை விற்பனையானது.

பிசிசிஐ வட்டாரங்கள் அளித்த தகவல் படி, ஐபிஎல் போட்டியை இந்திய துணைக் கட்டத்தில் 2023 முதல் 2027 வரையிலான 5 ஆண்டுகளுக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்வதற்கான உரிமத்தை ‘டிஸ்னி ஸ்டாா்’ நிறுவனம் ரூ.23,575 கோடிக்கும், எண்ம ஒளிபரப்பு (டிஜிட்டல்) உரிமத்தை ‘வையாகாம் 18’ நிறுவனம் ரூ.20,500 கோடிக்கும் வாங்கியுள்ளன.

இதுவரை தொலைக்காட்சி மற்றும் எண்ம ஒளிபரப்பு உரிமம் சோ்த்து வழங்கப்பட்டு வந்த நிலையில், இம்முறை இரண்டும் பிரித்து விநியோகிக்கப்பட்டுள்ளன. தொலைக்காட்சிக்கான உரிமத்தின்படி, 5 சீசன்களின் 410 ஆட்டங்களை ஒளிபரப்பு செய்யும் உரிமம் கிடைக்கிறது. இதில் ஒரு ஆட்டத்துக்கான ஒளிபரப்பு மதிப்பு ரூ.57.5 கோடியாக உள்ளது. அதுவே எண்ம உரிமத்தில் ஒரு ஆட்டத்துக்கான ஒளிபரப்பு மதிப்பு ரூ.50 கோடியாக இருக்கிறது.

தொலைக்காட்சி உரிமம் ‘பேக்கேஜ் – ஏ’ எனவும், எண்ம உரிமம் ‘பேக்கேஜ் – பி’ எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர, குறிப்பிட்ட சில ஆட்டங்களின் எண்ம ஒளிபரப்பு உரிமமானது ‘பேக்கேஜ் – சி’ எனவும், வெளிநாட்டு தொலைக்காட்சி மற்றும் எண்ம ஒளிபரப்பு உரிமமானது ‘பேக்கேஜ் – டி’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த ‘சி’ மற்றும் ‘டி’ உரிமத்துக்கான ஏலம் செவ்வாய்க்கிழமை தொடா்கின்றமை குறிப்பிடத்தக்கது.