கருத்தடை கதைகளும் ஷாபி விவகாரமும்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
காலம் தாழ்த்தப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமானது’ என்று சொல்வார்கள். ஆனால் உலக வரலாற்றிலும் குறிப்பாக இலங்கைச் சூழலிலும் பெரும்பாலும் காலதமதமாகியே நீதி நிலைநாட்டல்கள் இடம்பெறுகின்றன. வேறு சில சம்பவங்கள் தொடர்பில் தார்மீகமான நீதி கடைசி மட்டும் நிலைநாட்டப்படுவதே கிடையாது.
அந்த வகையில்;, ‘சிங்கள தாய்மார்கள் ஆயிரக்கணக்கோனோருக்கு கருத்தடை செய்தார்’ என்று குற்றம்சாட்டப்பட்ட வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் எதிர்காலத்தில் என்ன தீர்ப்பை வழங்கப் போகின்றது? இறுதித் தீர்ப்பின் ஊடாக நிலைநாட்டப்படும் நீதி எவ்விதம் அமையப் போகின்றது? என்பதெல்லாம் இப்போது நமக்குத் தெரியாது.
இருந்த போதும், வைத்தியர் ஷாபி தனக்கு நீதிமன்ற உத்தரவுக்கமைய வழங்கப்பட்ட சம்பள நிலுவையான 2.6மில்லியன் ரூபா பணத்தை, அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக சுகாதார அமைச்சுக்கே நன்கொடையாக வழங்கியுள்ளார் என்ற விடயம், இன்று பரவலாக சிலாகித்துப் பேசப்படுகின்றது,
இதுபற்றி டாக்டர் ஷாபி வீரகேசரிக்கு தெரிவிக்கையில் “நான் இந்த நாட்டையும் எல்லா இனங்களைச் சேர்ந்த மக்களையும் நேசிப்பவன். என்னைப்போல் பலர் உள்ளனர். ஆனால், மக்களின் நலன்பற்றிச் சிந்திக்காமல் செயற்படும் இனவாதிகள் மற்றும் சுயநலவாதிகளின் காரணமாகவே நாட்டின் முன்னேற்றம் தடைப்பட்டுள்ளது. பெரும் இக்கட்டுக்குள் சிக்குண்டுள்ள இந்த சந்தர்ப்பத்திலாவது நாம் பேதங்களை மறந்து இலங்கையர் என்ற அடையாளத்துடன் நாட்டின் சுபீட்சத்திற்காக உண்மையாக உழைக்க முன்வர வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
‘சிங்கள மக்கள் மீதான கர்ப்பத்தடை முயற்சிகள்’ பற்றிய புனைகதைகள் எங்கிருந்து தொடங்கியது, அதன் பின்னணி என்ன என்பது பற்றி வரலாற்றைத் தெரிந்தவர்கள் அறிவார்கள். குறுகிய மனப்பான்மை கொண்ட பெருந்தேசியவாதத்தின் நாட்பட்ட ஒரு மனவியாதியாக இதைக் கருதலாம்.
முஸ்லிம்கள் விகிதாசார அடிப்படையில் ஒப்பீட்டளவில் வேகமாக சனத்தொகையில் வளர்ச்சி காண்கின்றார்கள் என்ற கருத்தியலே இதற்கான அடிப்படை ஆகும். அதுதான், ‘முஸ்லிம்கள் சிங்கள மக்களின் கருத்தரிப்பு ஆற்றலை இல்லாது செய்யும் சதித்திட்டங்களில் ஈடுபடுகின்றார்கள்’ என்ற கருத்துருவாக்கமாகும். இது நீண்டகாலமாகவே சிறிய அளவில் இருந்து வந்த கருத்துதான். அங்கும் இங்குமாக சில இனவாதிகள் இவ்வாறான கதைகளைச் சொல்லிக் கொண்டுதான் இருந்தார்கள்.
2018ஆம் ஆண்டில் இது விஸ்வரூபம் எடுத்தது. அவ்வருடம் பெப்ரவரி 26ஆம் திகதி அம்பாறை நகரில் முஸ்லிம் ஒருவரால் நடாத்தப்படும் உணவகம் ஒன்றில் கருத்தடை மருந்துகள் சேர்க்கப்பட்ட கொத்துரொட்டி சிங்கள வாடிக்கையாளருக்கு விற்பனை செய்யப்பட்டதாக ஒரு கதை கட்டிவிடப்பட்டது. இதனையடுத்து, அந்த கடை நொருக்கப்பட்டது மட்டுமன்றி சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ள அம்பாறை ஜூம்ஆ பள்ளிவாசலின் உள்ளே புகுந்த காடையர்கள் அதன் ஒருபகுதியை உடைத்துவிட்டுச் சென்றார்கள்.
சட்டத்தை நடைமுறைப்படுத்துவோர் பெருந்தேசியத்தின் சட்டைப் பைக்குள் இருந்துகொண்டு வேடிக்கை பார்த்தனர். இந்தப் பிரச்சினையை ஆராய்வதற்காக அம்பாறை மாவட்டத்திற்கு வந்த அப்போதைய பிரதமர் ரணில், ஒலுவிலில் கூட்டத்தை நடத்திவிட்டு ஸ்தலத்திற்கு கூட போகாமல் கொழும்பு பறந்தார்.
இந்த நாடகத்தின் இரண்டாம் பாகம் இரண்டு, 2019 மே மாதம் அரங்கேறியது. காட்டுமிராண்டிக் கும்பல் ஒன்றினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு, அந்தப் பழி ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீது திருப்பி விடப்பட்டு சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகும், ராஜபக்~க்கள் ஆட்சிக்கு வருவதற்கு ஆறு மாதங்ககளுக்கு முன்னரும் இது நடந்தேறியது.
2019மே மாதம் ஒரு சிங்களப் பத்திரிகை ‘குருணாகல் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் முஸ்லிம் வைத்தியர் ஒருவர் சுமார் 4000 சிங்கள குடும்பப் பெண்களுக்கு மிக நுட்பமான முறையில் கருத்தடை செய்துள்ளதாக’ தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தது. இதன் உண்மைத்தன்மையை கண்டறியாமல், உடனடியாக இவ்விவகாரம் சிங்கள மக்களிடையே தீயாய் பரவியது.
ஒரு அரச வைத்தியசாலையில் தனியே ஒரு வைத்தியர் சிகிச்சை அளிப்பது கிடையாது. அதனுடன் பல ஊழியர்கள் சம்பந்தப்படுகின்றார்கள். இப்படியான நிலையில் ஒரு வைத்தியரால் அதுவும் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு கருத்தடை செய்வது சாத்தியமில்லை. அப்படி ஒரு வைத்தியர் செய்திருக்கவும் வாய்ப்பில்லை என்பது யாவருக்கும் புரிகின்ற விடயமாகும்.
இதனை அப்போதே ஓரிரு சிங்கள வைத்திய நிபுணர்கள் பகிரங்கமாகச் சொன்னார்கள். ஷாபி அவ்வாறு செய்திருக்க மருத்துவ ரீதியான சாத்தியங்கள் இல்லை என்றும், உணவுப் பொருட்களுக்குள் தூவி அல்லது ஆடையில் பூசி கருத்தடை செய்வது விஞ்ஞான ரீதியாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறினார்கள்.
அத்துடன், தேர்தலில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்ற ஒருவரான சாபி மீதான இக் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னணியில் ஒரு பெண் வைத்தியர் இருப்பதாகவும், அவர் ஒரு உயர் பொலிஸ் அதிகாரியின் மனைவி என்றும் தகவல்கள் கசிந்தன. ஆகவே இதற்குப் பின்னால் வேறு ஏதோ இருப்பதாக அப்போதே சொல்லப்பட்டது.
ஆனால், இவை எதுவும் கைகொடுக்கவில்லை. அரசாங்கம் கூட பொறுப்புடன் செயற்படவில்லை. குறிப்பாக, ஒரு வைத்தியருக்கு சிறு அவமானம் ஏற்பட்டாலும் மடித்துக் கட்டிக் கொண்டு நிற்கின்ற அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், இது விடயத்தில் நீதமாக நடந்து கொள்ளவில்லை. இலங்கையிலுள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம் வைத்தியர்களும் அடக்கியே வாசித்தனர்.
இந்தப் பின்னணியில், வைத்தியர் கைது செய்யப்பட்டார். பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு அவரோ அவரது மனைவி பிள்ளைகளோ வெளியில் நடமாட முடியாத அளவுக்கு போகுமிடமெல்லாம் தம்மை குற்றவாளிபோல் பார்ப்பதாக எம்மிடம் ஒரு தடவை அவர் சொன்னார். இதனால், தனது குடும்பம் மரியாதையுடன் வசிக்கக் கூடிய ஒரு இடத்தைத் தேடிய வைத்;தியர் கடைசியாக அம்பாறை மாவட்டத்தில் சில காலம் வசித்தார். இப்போது கண்டியில் வசிக்கின்றார்.
இத்தனை நெருக்கடிகளுக்கு நடுவிலும் இன்னும் வழக்கு முடியவில்லை. தன்மீதான களங்கத்தை போக்குவதற்காக, நீதி கிடைக்கும் நம்பிக்கையுடன் தொடர்;ந்து போராடி வருகின்றார். இதற்கிடையில், கருத்தடை செய்யப்பட்டதாக அடையாளப்படுத்தப்பட்ட பலர் பின்னாளில் பிள்ளைகளையும் பெற்றெடுத்ததாக தகவல் வெளியாகின. இந்தக் குற்றச்சாட்டு மட்டுமன்றி, கடந்த காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வேறுபல பல போலிக் குற்றச்சாட்டுகளும் இனவாத பிரசாரங்களும் இதுபோலவே தோலுரிக்கப்பட்டு, பொய்யென்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
இந்நிலையில், வைத்தியர் ஷாபிக்கான சம்பள நிலுவையை வழங்குமாறு நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கமைய சுகாதார அமைச்சு 2,675,816.48 ரூபா நிலுவையை வழங்கியது. அவர் அத்தொகையை அத்தியாவசிய மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
நாட்டை கொள்ளையடித்த கூட்டமும், அரசியல்வாதிகளும், பெரும் பணக் காரர்களும் மக்களுக்காக எதனையும் இழக்க தயாரில்லாத இன்றைய காலகட்டத்தில், அபாண்டமான குற்றச்சாட்டின் காரணமாக காலதாமதமாகி கிடைத்த சம்பளத்தை நன்கொடையாக வழங்கியதன் மூலம் வைத்தியர் ஒரு முன்மாதிரியை காட்டியுள்ளமை பரவரலான கவனிப்பைப் பெற்றுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூட பதிவொன்றை இட்டுள்ளார். “பொய், பொறாமை, வெறுப்பு ஆகியவற்றை உடுத்திய சிங்கள கடும்போக்குவாதத்தின் வெட்கக்கேடான அத்தியாயம்’ என்பது சந்திரிகா அம்மையார் கூறியுள்ளதைப் போல வைத்தியர் மட்டும் சீரழிக்கவில்லை. மாறாக இந்த நாட்டில் உள்ள எல்லா மக்களின் வாழ்க்கையையும் கெட்டு குட்டிச் சுவராக்கியுள்ளது என்பதை குறிப்பாக சிங்கள மக்கள் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.
-ஏ.எல்.நிப்றாஸ்