பெலவத்தை எரிபொருள் நிரப்பு நிலைய அமைதியின்மை சம்பவம் குறித்து காவல்துறை விளக்கம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – களுத்துறை – மீகஹதென்ன – பெலவத்தை எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் நேற்றிரவு அமைதியின்மை ஏற்பட்டிருந்தாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதன்போது, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, பாதுகாப்புத் தரப்பினர் வான்நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பிரவேசித்த, நபர் ஒருவர் தமது மகிழுந்துக்கு எரிபொருளை நிரப்பியதன் பின்னர், கொள்கலன் ஒன்றிலும் எரிபொருளை பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளார்.
இதன்போது, அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த இராணுவ சிப்பாயின் துப்பாக்கியை பறிப்பதற்கு சிலர் முற்பட்டதை அடுத்து, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக வான்நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில், நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.