நாங்கள் கூறியதே நாட்டில் நடந்துள்ளது: விஜயதாச ராஜபக்ச

நாங்கள் கூறியதே நாட்டில் நடந்துள்ளது: விஜயதாச ராஜபக்ச

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

20வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டால், அரசாங்கம் நீண்டகாலம் நீடிக்காது என ஆரம்பத்திலேயே கூறியதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பதவிக்கு வந்த உடன், அஜித் நிவாட் கப்ரால் மற்றும் பீ.பி.ஜயசுந்தர ஆகியோரை நியமித்ததும் அரசாங்கத்தின் இருப்புக்கு தடையாக இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக விளக்குவதற்காக அரசாங்க தகவல் திணைக்ககளத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளர்.

கம்மன்பில உட்பட 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அன்று மேற்கொண்ட போராட்டத்தின் பிரதிபலனாக அன்று எதிர்க்கட்சிக்கு செய்ய முடியாததை செய்ய முடிந்தது.

அத்துடன் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டால், அரசாங்கம் இரண்டு ஆண்டுக்கு மேல் நீடிக்காது என்று நாங்கள் எதிர்வுகூறியிருந்தோம்.

மிகப் பெரிய யுத்தத்தில் வென்றதன் காரணமாகவே மகிந்த ராஜபக்சவுக்கு ஆறு ஆண்டுகளுக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்தது.

18வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தை கொண்டு வந்ததன் காரணமாக அவரது பதவிக்காலம் நான்கு ஆண்டுகளில் முடிந்தது.

இந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே 20வது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டால், அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்காது என்று நாங்கள் கூறினோம்.

நாங்கள் கூறியது போலவே நடந்தது. 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு மேல் அரசாங்கம் பதவியில் இருக்காது என்று 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி நேரடி ஊடக சந்திப்பொன்றில் கூறினேன்.

2022 ஆம் ஆண்டு ஏப்ரலில் அரசாங்கத்திற்கு பொருளாதார முன்னெடுத்துச் செல்ல முடியாமல் போனது. மக்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்கள் இல்லாமல் போகும்.

மக்கள் வீதியில் இறங்குவார்கள். பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் மக்களை கட்டுப்படுத்த முடியாமல் போகும். மக்கள் மிகவும் ஆத்திரமடைவார்கள், ஆட்சி மாற்றம் ஏற்படும் நாடாளுமன்றத்தை கொண்டு நடத்த முடியாமல் போகும் என்று அப்போதே கூறினேன். ஏழு மாதங்களுக்கு இதனை கூறினேன்.

மக்கள் வீதியில் இறங்குவார் என்று அறிந்தே நான் இடைக்கால சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைத்தேன்.

அது அரசியலமைப்புச்சட்டத்திற்கு உட்பட்டது. எனினும் அந்த யோசனையை ஆளும் கட்சியை போல், எதிர்க்கட்சியும் நிராகரித்தது. இதற்கிடையில் மக்கள் வீதியில் இறங்கியதால்,பிரச்சினையின் பாரதூரமான தன்மையை அனைவரும் உணர்ந்துக்கொள்ள முடிந்தது.

இது சம்பந்தமாக மூன்று வாரங்கள், அனைத்து கட்சிகளுடனும் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடினோம். பிரதான எதிர்க்கட்சி அரசாங்கத்தை பொறுப்பேற்க முன்வந்தால், ஒப்படைப்பீர்களா என்று நாங்கள் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

ஜனாதிபதி அதற்கு இணங்கினார். ராஜபக்ச குடும்பத்தினரை அமைச்சரவையில் இருந்து நீக்குவது தொடர்பில் பேச்சு நடத்தினோம், ஜனாதிபதி அதற்கு இணங்கினார்.

பிரதமரை நீக்கவும் ஜனாதிபதி இணங்கினார். நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேலைத்திட்டம் இருந்தால், நான் பிரதமரை நீக்க தயாராக இருக்கின்றேன் என ஜனாதிபதி கூறினார்.

பிரதான எதிர்க்கட்சி உட்பட எதிர்க்கட்சிகளுக்கு நாங்கள் அழைப்பு விடுத்தோம். மூன்று வாரங்கள் நாங்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு எந்த பிரதிபலனும் கிடைக்கவில்லை.

சகல கோரிக்கைகளையும் எதிர்க்கட்சி நிராகரித்ததால், இதனால், பிரதமர் பதவியை ஒருவருக்கு கொடுத்து அரசாங்கத்தை அமையுங்கள் என்று எமக்கு ஜனாதிபதியிடம் கூற நேரிட்டது.

இதனடிப்படையில் ஜனாதிபதி, ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்த போது, நாங்கள் ஒத்துழைப்பு வழங்கினால், பிரதமர் பதவியை ஏற்று பிரச்சினைக்கு தீர்வுகாண தயார் என ரணில் விக்ரமசிங்க கூறினார் எனவும் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.