சிவிலியனை தாக்கிய லெப்டினன் கேர்னல் பொறுப்புக்களில் இருந்து நீக்கம்

சிவிலியனை தாக்கிய லெப்டினன் கேர்னல் பொறுப்புக்களில் இருந்து நீக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து,  சிவிலியன் ஒருவரை காலால் உதைத்து தாக்கிய சம்பவத்தை மையப்படுத்தி, அதனுடன் தொடர்புபட்ட  குருணாகல் – வெஹர  இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாக செயற்பட்ட லெப்டினன் கேர்ணல் விராஜ் குமாரசிங்க , அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடை நிறுத்தப்பட்டுள்ளார்.

இராணுவ தளபதி லெப்டினன் கொமாண்டர் விக்கும் லியனகேயின் உத்தரவுக்கு அமைய அவர் இவ்வாறு பொறுப்புக்களில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையக தகவல்கள் தெரிவித்தன.

சிரேஷ்ட இராணுவ அதிகாரியான குறித்த லெப்டினன் கேர்ணலின் நடவடிக்கை தொடர்பில், மேற்குப் பிராந்திய பாதுகாப்பு படைகளின் தலைமையகம் ஊடாக ,  படையணி ஒன்றின் கட்டளை அதிகாரியின் கீழ் ஐவர் கொண்ட  இராணுவ விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அவ்விசாரணையின் அறிக்கை கிடைக்கும் வரையில், இவ்வாறு குறித்த இராணுவ அதிகாரி பொறுப்புக்களில் இருந்து  இடை நிறுத்தப்பட்டுள்ளார்.

குருணாகல், யக்கஹபிட்டிய ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து, சிவிலியன் ஒருவர் இராணுவ வீரர்களால் பிடிக்கப்பட்டிருந்த நிலையில், இராணுவ  லெப்டினன் கேர்ணல் தர கட்டளை அதிகாரி ஒருவர் அவரை காலால் உதைத்து தாக்கும்  காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சம்பவத்தையடுத்து இராணுவ பொலிஸ் படையணியும் உடன் விசாரணைகளை ஆரம்பித்த நிலையிலேயே, ஐவர் கொண்ட இராணுவ விசாரணைக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சம்பவத்தை தொடர்ந்து, தாக்குதலுக்கு உள்ளான இளைஞன்  பொலிஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்ட பின்னர், இராணுவ தரப்பின் அதிகாரிகளும் அங்கு சென்று, பொலிஸ் நடவடிக்கைகளை சுமுகமாக தீர்த்துக்கொண்டுள்ளதாக அறிய முடிகிறது.

எவ்வாறாயினும், குறித்த இராணுவ அதிகாரி தாக்கும் காட்சியை வீடியோ படம் எடுத்ததாக கூறப்படும் நபருக்கும், அந்த அதிகாரி மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக கேசரிக்கு தகவல்கள் பதிவாகியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில்  கருத்து வெளியிட்ட குற்றம் சாட்டப்படும் இராணுவ லெப்டினன் கேர்னல் விராஜ் குமாரசிங்க, தான் குருணாகல் பகுதியில் சேவையாற்றும் நற்பெயர் மிக்க இராணுவ அதிகாரி எனவும்,  குறித்த  எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே பாதாள உலகக் கோஷ்டியினர் ஒன்றுகூடியுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய தாம் அங்கு சென்றதாகவும் கூறினார்.

தான் காலால் உதைத்தது உண்மையே என குறிப்பிட்ட  லெப்டினன் கேர்ணல் விராஜ் குமாரசிங்க, எனினும் அந்த தாக்குதல் குறித்த சிவியன் மேல் விழவில்லை எனவும்,  குறித்த நபரிடமே அது தொடர்பில் கேட்டுப்பார்க்க முடியும் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.